×

திருவள்ளூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறும் அவலம்: உணவுக்காக கையேந்தும் நிலை ஏற்படுமோ என அச்சம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறும் அவலநிலை நீடிப்பதால், உணவுக்காக கையேந்தும் நிலை ஏற்படுமோ, என சமூக ஆர்வலர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையை ஒட்டிய மாவட்டமான திருவள்ளூர் மாவட்டம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. மாவட்டம் உதயமாகி 33 ஆண்டுகள் ஆகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். கரும்பு, நெல், காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு, பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

நாம் வசிக்கும் நகரம், கிராம பகுதிகள், முன்பு குறுகிய அளவில், குறிப்பிட்ட அளவில் இருக்கும். நாம் வசிக்கும் இடங்களை சுற்றிய விளை நிலங்கள் பசுமை போர்வை போர்த்தியது போல் காணப்படும். இதன் மூலம், சுகாதாரமான காற்று, சுத்தமான குடிநீர் என, அனைத்தும் கிடைத்து வந்தது. மக்கள் தொகை பெருக்கம், நகரங்கள் விரிவாக்கத்தால், வீட்டு மனைகள், குடியிருப்புகள் அதிகமாகின்றன. மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யாமல், இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதால் போதிய லாபம் இல்லாமல் நஷ்டத்துக்கு ஆளாகி வந்தனர்.

அதே நேரத்தில் பருவமழை காரணமாகவும் பயிர்கள் நாசம் அடைந்து விவசாயிகள் பெருத்தளவில் நஷ்டம் அடைகின்றனர். தற்போது, விவசாயிகளின் பிள்ளைகளும் கல்வி அறிவில் தங்களை வளர்த்துக்கொண்டு தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பத்துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் விவசாய நிலங்கள் பயிர் செய்யாமல் உள்ளது. மேலும், மாநில தலைநகர் சென்னையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது வேலைகளுக்காகவும், வியாபாரத்திற்காகவும், தொழிலுக்காகவும் அதிகளவில் வந்து சேர்ந்ததால் நெருக்கடியான நகரமாக மாறியது. மேலும், அங்கு வாடகை முதல் கொண்டு வீட்டுமனை வரை பல்லாயிரக்கணக்கில் இருந்து கோடி கணக்கு வரை செலவழிக்க வேண்டி உள்ளது.

சென்னை ஒட்டிய மாவட்டமான திருவள்ளூருக்கு பெரும்பாலானோர் படையெடுக்க தொடங்கினர். விளை நிலங்களை குடியிருப்புகளாக மாற்றி வருகின்றனர். விளை நிலங்கள் நல்ல விலைக்கு விற்க, ஏராளமான புரோக்கர்கள் வலம் வருகின்றனர். விவசாயம் செய்ய மழை இல்லை, கிணற்றில் தண்ணீர் இல்லை என புலம்பும் விவசாயிகளிடம், புரோக்கர்கள் எளிமையாக நாடி நஷ்டமடையும் தொழில் எதற்கு எனக் கூறி விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விளை பொருட்கள் உற்பத்தி குறைகிறது. கால்நடைகள் தீவனம் கிடைக்காமல், அதன் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. விலைவாசியும் நாளுக்கு நாள் உயர்கிறது.

தற்போது நாகரிக வளர்ச்சி என்ற பெயரால் பீட்சா, பர்க்கர் போன்ற உணவு பழக்கங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் இதுபோன்ற உணவு பொருட்களையே சாப்பிட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நெல் பயிரிடும் விவசாயிகள், தமிழகத்தில் அதிகளவில் இருக்கின்றனர். அதிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகம் நெற்பயிரையே பயிரிட்டு வருகின்றனர். ஆனால், தற்போது விளை நிலங்களை பல்வேறு காரணங்களால் அதை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். எனவே, குறைந்தது 20 ஆண்டுகளாகவது விவசாயம் செய்யாத இடங்களை மட்டுமே பிளாட் போட அனுமதிக்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்.

பிளாட் போடுபவர்கள் பலர் எந்த துறையிடமும் தடையில்லா சான்று பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவது அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலை திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால், உணவுக்காக வெளிநாடுகளில் கையேந்த வேண்டிய நிலை ஏற்படுமோ என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : Thiruvallur ,Thiruvallur district ,Chennai ,Tamil Nadu ,
× RELATED 13 வயது மகள் பலாத்காரம் தந்தைக்கு...