திண்டுக்கல் டிச.24: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார், ஆட்டோ, டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. திண்டுக்கல் சீலப்பாடி பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட வாகனங்கள் நேற்று பொது ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தை மதுரை டிஐஜி அபினவ்குமார், திண்டுக்கல் எஸ்பி பிரதீப் ஆகியோர்கள் தொடங்கி வைத்தனர். இந்த ஏலத்திற்காக கடந்த 20 தினங்களுக்கு முன்பாகவே இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1000, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.5000 வைப்புத் தொகையாக செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக பறிமுதல் செய்யப்பட்ட 26 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு கார் என மொத்தம் 28 வாகனங்கள் ரூ.6.33 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. அதேபோல் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இருசக்கர வாகனங்கள் ரூ.87 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது.
