பெங்களூரு: இன்று துவங்கவுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டிகள், நட்சத்திர வீரர்கள் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, சுப்மன் கில் உள்ளிட்டோர் ஆடுவதால், கிரிக்கெட் ரசிகர்களின் பேரார்வத்துக்கு விருந்து படைக்க உள்ளன. உள்நாட்டில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் போட்டிகள், பெங்களூரு, அகமதாபாத், ராஜ்கோட் உள்ளிட்ட பல நகரங்களில் இன்று துவங்க உள்ளன. இதில், எலைட் மற்றும் பிளேட் பிரிவுகளில் மொத்தம் 38 அணிகள் மோதவுள்ளன.
அகமதாபாத் நகரில் இன்று நடக்கும் போட்டியில், ஏ பிரிவில், தமிழ்நாடு – புதுச்சேரி அணிகள் மோதுகின்றன. விஜய் ஹசாரே கோப்பைக்கான காலிறுதிப் போட்டிகள், வரும் ஜனவரி 12 மற்றும் 13 தேதிகளிலும், அரை இறுதிப் போட்டிகள் ஜனவரி 15 மற்றும் 16ம் தேதிகளிலும் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி ஜனவரி 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பல நட்சத்திர வீரர்கள் ஆடுவதால், இப்போட்டிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளன.
இந்திய அணியில் உள்ள வீரர்கள், குறைந்தபட்சம் 2 விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளிலாவது ஆட வேண்டும் என, பிசிசிஐ பிறப்பித்த உத்தரவால், இந்த மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா, மும்பை அணிக்காக, இன்று நடைபெறும் சிக்கிமுக்கு எதிரான போட்டியிலும், 26ம் தேதி உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியிலும் ஆடவுள்ளார்.
மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி டெல்லி அணிக்காக ஆடுகிறார். எலைட் பிரிவில் டி பிரிவில் உள்ள டெல்லி அணி, ஆந்திரா அணிக்கு எதிராக, பெங்களூருவில் நடக்கும் போட்டியில் களம் காணவுள்ளது. இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில், அபிஷேக் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பஞ்சாப் அணிக்காக ஆடுகின்றனர். தவிர, தமிழ்நாடு அணியில் குர்ஜப்நீத் சிங், ஜம்மு காஷ்மீர் அணியில் யுத்வீர் சிங், பீகார் அணியில் சாகிப் உசேன் போன்ற பிரபல வீரர்கள் இணைந்துள்ளனர்.
* சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டி நடக்காது
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியை, பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங், நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிகளை, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடத்த, கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அனுமதி கோரியது. அது குறித்து முடிவு எடுக்க, நிபுணர் குழுவை, மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா அமைத்துள்ளார்.
இந்நிலையில், சின்னசாமி ஸ்டேடியத்தில் 24ம் தேதி போட்டி நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. மாறாக, புறநகரில் உள்ள பிசிசிஐயின், சென்டர் ஆப் எக்சலன்ஸ் மைதானத்தில் விஜய் ஹசாரே போட்டி நடக்கும்’ என்றார். கடந்த ஜூன் மாதம், ஐபிஎல்லில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து நடந்த அசம்பாவித சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
