சென்னை: சென்னை, பெரம்பூர், தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நேற்று நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: எங்கும் அன்பு நிறைந்திடவும், சகோதரத்துவம் தழைத்திடவும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையின கல்லூரி மாணவர் நலன் கருதி சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் 130 மாணவர்கள் பயனடையும் அளவிற்கு, புதிய விடுதிகளை தொடங்கியிருக்கிறோம்.சிறுபான்மையின மாணவ – மாணவிகளுக்காக 14 கல்லூரி விடுதிகளில், நூலகம், உடற்பயிற்சி கருவிகள், விளையாட்டு கருவிகள் இப்படி பலவற்றை ஏற்படுத்தியிருப்பதோடு, அந்த மாணவர்களின் தனித்திறன் மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றலை உயர்த்த வேண்டும் என்கின்ற அந்த பயிற்சியை நிறைய செய்துகொண்டு இருக்கிறோம்.
மாணவ-மாணவியர் விடுதிகளில் தங்கிப் படிக்க, அவர்களின் பெற்றோருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பையும் பல்வகை செலவினத் தொகையையும் உயர்த்தியிருக்கிறோம், கிராமப்புற மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்று இதுவரைக்கும் ஒரு லட்சத்து 3 ஆயிரம் மாணவிகளுக்கு ரூ.6 கோடியே 57 லட்சம் ஊக்கத்தொகை, வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சிறப்பான திட்டம் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும், ரூ.90 ஆயிரத்து 723 மாணவிகளுக்கு ஆயிரம் கல்வி உதவித் தொகை, சிறுபான்மையினரால் நடத்தப்படும் 456 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கியிருக்கிறோம்.
2019 முதல் 2024 வரை செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள் 2019ன்படி உள்ள மதச்சார்பான கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் என்ஓசியை வலியுறுத்தாமல் திட்ட அனுமதி வழங்கப்படும். இந்த காலத்தில் திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பித்திருக்கும் மதச்சார்பான கட்டிடங்களுக்கும் இது பொருந்தும். இனிகோவின் கோரிக்கைகள் இனி இல்லை என சொல்லக் கூடிய அளவிற்கு அறிவிப்புகள் செய்துவிட்டேன். அதனால், நீங்கள் எப்போதும் போல் அரசின் சாதனை திட்டங்களை, நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று, நமக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.
நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் அனைவரும், இன்றைக்கு என்ன மாதிரியான அச்ச உணர்வோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை, இந்த நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் எதேச்சதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும், கொள்கையும், உணர்வும் திமுகவிற்கு தான் இருக்கிறது. அதனால் தான், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் போதும் சரி, இப்போதும் சரி, உங்கள் எல்லோரின் வாக்குரிமையையும் உறுதி செய்ய உறுதியுடன் களப்பணி ஆற்றிகொண்டு இருக்கிறோம்.
நாட்டில், அன்புவழி நடக்கும் சமத்துவத்தை விரும்பும் சக மனிதர்களை சகோதர, சகோதரிகளாக நினைக்கும் மக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். ஜனநாயகத்தில் இந்த வலிமைமிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து, மக்களும் ஆதரவாக இருக்கும் போது, எந்த பாசிச சக்திகளாலும், ஒன்றும் செய்ய முடியாது, உங்களுக்கு துணையாக திமுக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் உறுதியாக இருக்கும், அதேபோல், என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் எதேச்சதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும், கொள்கையும், உணர்வும் திமுகவிற்குதான் இருக்கிறது.
