ஓசூர், டிச.24: முத்தாலி ஊராட்சி பூதிநத்தம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை, பிரகாஷ் எம்எல்ஏ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினார். ஓசூர் ஒன்றியம், முத்தாலி ஊராட்சியில் உள்ள பூதிநத்தம் கிராம மக்கள், 3 கி.மீ தூரம் நடந்து சென்று, முத்தாலி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்தனர். இதனால், ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் சார்பில் பிரகாஷ் எம்எல்ஏவிடம் கோரிக்க வைத்தனர். அதனை ஏற்று, முத்தாலி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையின் கார்டுதாரர்களை பிரித்து, பூதிநத்தம் கிராமத்திலேயே, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த ரேஷன் கடையை மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ., நேற்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, துணை மேயர் ஆனந்தய்யா, தெற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, மாநகர பொருளாளர் தியாகராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதேஷ், பிரகாஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சீதாராமன், காரப்பள்ளி சீனிவாசன், நவீன்குமார், ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
