பொன்னேரி, டிச.24: நடுக்கடலில் சமைத்து கொண்டிருந்தபோது படகு தீப்பிடித்து எரிந்ததில் மீனவர் படுகாயமடைந்தார். திருவொற்றியூரை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான படகில், அதே ஊரை சேர்ந்த வாசு, ராஜு, தீனா என 4 பேர் நேற்று பழவேற்காடு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்ேபாது, நண்பகல் நேரத்தில் மீனவர்கள் தங்களுக்காக மதிய உணவை படகில் சமைத்துக் கொண்டிருந்தனர். இதில், எதிர்பாராத விதமாக திடீரென படகு தீப்பற்றி எரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் 4 பேரும் படகிலிருந்து கடலில் குதித்து உயிர் தப்பினர். இதனைக்கண்ட, சக மீனவர்கள் கடலில் தத்தளித்த 4 மீனவர்களை மீட்டனர். மேலும், தீப்பிடித்து எரிந்த படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். தீக்காயமடைந்த மீனவர் ஜெகனுக்கு பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சமையல் செய்த போது படகு தீப்பற்றி 4 மீனவர்கள் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
