திருச்சி காவேரி ஆற்றங்கரையை ஒட்டி அதுவும், காவேரி பாலத்தின் மிகமிக அருகில், “வீர ஆஞ்சநேயர்’’ என்னும் பெயரில் அனுமன் அருள்பாலிக்கிறார். இவர் வீற்றிருக்கும் இடத்தின் பெயர் “மாம்பழச்சாலை’’. பெயருக்கு ஏற்றால் போல் எண்ணற்ற பல மாம்பழகடைகள் அனுமனை சுற்றிலும் இருக்கின்றன. விதவிதமான மாம்பழங்கள் இங்கு கிடைக்கின்றன. இங்கிருந்து பல நாடுகளுக்கும் மாம்பழங்கள் ஏற்றுமதி ஆகிறது. மார்ச், ஏப்ரல், மே போன்ற மாதங்களில் மாம்பழம் சீசன். ஆகையால், திருச்சி அருகில் இருக்கக்கூடிய முசிறி, நாமக்கல், கரூர் ஆகிய ஊர்களில் இருந்து மக்கள், மாம்பழச் சாலையில் குவிவார்கள். டன் கணக்கில் மாம்பழத்தை வாங்கிக்கொண்டு, வீர ஆஞ்சநேய ஸ்வாமியிடத்தில், நன்கு வியாபாரம் நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.வீர ஆஞ்சநேயரிடத்தில் வேண்டிக் கொண்டபடி அன்றைய தினம் வியாபாரம் சூடுபிடிக்குமாம். டன் கணக்கில் வாங்கிய அத்தனை மாம்பழங்களும் விற்றுத்தீர்ந்துவிடுமாம். ஆகையால், இப்பகுதி மாம்பழ விவசாயிகளுக்கு வீர ஆஞ்சநேயர் அருள்கிறார்.
முன்னொரு காலத்தில், இவ்விடம் “மாங்கனி தோப்பாக’’ இருந்திருக்கிறது. சேலத்திற்கு பின் திருச்சி மாம்பழச்சாலைதான் மாங்கனிக்கு பிரபலமாக இருந்திருக்கிறது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இவ்விடம் மாறிப்போக, தற்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள “தாத்தாச்சாரியார்’’ தோப்பில் விளையும் மாம்பழங்கள் இங்கு விற்பனைக்கு வருகிறது. அது போக, சேலத்து மாம்பழங்களும் விற்பனைக்கு வருகிறது.சனிக்கிழமைகளில், வீர ஆஞ்சநேயர் கோயிலில் கூட்டம் அலைமோதும். குறிப்பாக ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், டோல்கேட், பிட்சாண்டார் கோயில், உறையூர், பாலக்கரை, போன்ற பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகைபுரிவார்கள்.அனுமன் ஜெயந்தி அன்று கோயில் முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அன்றைய தினத்தில், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும். மிக முக்கியமாக, பல வகை பழங்களினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மாலையில், வீர ஆஞ்சநேயருக்கு “வெண்ணெய் காப்பு’’ சாற்றப்பட்டிருக்கும். சாதாரண நாட்களில், ஸ்வாமிக்கு துளசி மாலைகளால், அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும். அப்போது மிக அழகாக வீர ஆஞ்சநேயர் காட்சியளிப்பார். சில ஆண்டுகளுக்கு முன்பு, மாம்பழச்சாலையில் உள்ள மாருதி கார் ஷோரூம் முன்பாக இந்த அனுமன் கோயில்கொண்டிருந்தார். மகான் ஸ்ரீவியாசராஜரும் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் இந்த இடத்தில்தான்.
சில காரணங்களால் இக்கோயில் இடிக்கப்பட்டு, சற்று தூரத்தில் மீண்டும் வீர ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். தற்போது காலை, மாலை என இருவேளைகளிலும் அனுமனுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. வழக்கமாக வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமனின் கையில் மலை இருக்காது. ஆனால், இந்த அனுமனின் கையில் மலையானது இருக்கிறது!
எப்படி செல்வது: ஸ்ரீரங்கம், சமயபுரம், குணசீலம் ஆகிய பேருந்துகள் மாம்பழச்சாலையில் நின்று செல்லும்.
