கோவை, டிச.23: கோவை மத்திய சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டது. பூங்காவை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்ட நாள் முதல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு வருகிறார்கள். நேற்று வரை 1.30 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், செம்மொழி பூங்காவை ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர். அப்போது அவர்கள் பேட்டரி வாகனம் மூலம் பூங்காவில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கண்டு ரசித்தனர்.
