- தேசிய ஹெரால்டு
- தில்லி உயர் நீதிமன்றம்
- சோனியா
- ராகுல் காந்தி
- ED
- புது தில்லி
- காங்கிரஸ்
- சோனியா காந்தி
- அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துக்களை ரூ.90 கோடி கடனுக்கு ஈடாக மோசடியாக கையகப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்த வழக்கில் சமீபத்தில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டது.
தனி நபரின் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க முடியாது என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, மோடி அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்ததாக காங்கிரஸ் கருத்து தெரிவித்தது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அதற்கு தடை விதிக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ரவிந்தர் துதேஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், சோனியா, ராகுல் காந்தி சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, ஆர்.எஸ்.சீமா ஆகியோரும் ஆஜராகினர்.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘தனிநபரின் புகாரின் அடிப்படையில் விசாரிப்பதில் எந்தவித தவறும் கிடையாது. இதுப்போன்று பல வழக்குகள் விசாரணையில் எடுத்துக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் முந்தைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நேஷனல் ஹெரால்டு தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து உள்ள மனு மீது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து தரப்பும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை 2026 மார்ச் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
