கன்னியாகுமரி-புனே ரயிலின் ஏசி பெட்டியில் மாணவிகளிடம் அத்துமீறிய ஒப்பந்த ஊழியர்

*புகார் பதிவு செய்த சில மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை

நாகர்கோவில் : கன்னியாகுமரியில் இருந்து சென்ற ரயிலில் போதையில் பயணிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது. புகார் பதிவு செய்த சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபரை ரயிலில் இருந்து இறக்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கன்னியாகுமரி – புனே இடையே தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து காலை 8.40க்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் இரவு 9.50க்கு புனே சென்றடையும். நாகர்கோவில், திருவனந்தபுரம்,கொல்லம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, திருப்பதி, கல்புர்கி, சோலாப்பூர் வழியாக புனே சென்றடையும்.

நேற்று (ஞாயிறு) காலையிலும் வழக்கம் போல் இந்த ரயில் காலை 8.40க்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. அப்போது ரயிலின் குளிர்சாதன பெட்டியில் இருந்த நபர் ஒருவர் அதே பெட்டியில் பயணம் செய்த இரு மாணவிகளிடம் அநாகரீமான முறையில் பேசி நடந்து கொண்டார்.

அந்த நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த பயணிகள் எச்சரித்த போது, அவர்களை மிரட்டவும் செய்துள்ளார். இதற்கிடையே ரயில் குழித்துறையை கடந்து கேரள எல்லையை நெருங்கி கொண்டிருந்தது.

இது குறித்து அங்கிருந்த பயணி ஒருவர் ஐஆர்டிஇசி இணைய தளத்தில் புகார் அளித்தார். மேலும் நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயிலில் பயணம் செய்த பயணிகள் வாட்ஸ் அப் மூலமும் இந்த தகவல்களை பரப்பினர். இதற்கிடையே நாகர்கோவில் ரயில்வே போலீசார் இது பற்றிய தகவலை திருவனந்தபுரம் ரயில்வே ஆர்.பி.எப். காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர்.

இதற்கிடையே ஆன்லைனில் புகார் அளித்தது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் புகார் அளித்த பயணியை தொடர்பு கொண்ட போது, அந்த நபர் ரயிலில் தொடர்ந்து இருப்பது உறுதியானது. இதற்கிடையே பகல் 11.52க்கு ரயில் கொல்லத்தை அடைந்த சமயத்தில் போலீசார் அந்த ரயிலில் ஏறி போதையில் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை பிடித்து கீழே இறக்கினர்.

விசாரணையில் அந்த நபர் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜாண் என்பதும், ரயிலில் குளிர் சாதன பெட்டியில் பெட்ஷீட், தலையணை வினியோகம் செய்யும் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. போலீசாரிடம் தான் அத்துமீற வில்லை என்றும், மாணவிகள் இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்தவர்களை மாறி இருக்குமாறு கூறியதாகவும் தெரிவித்தார். அவரை போலீசார் எச்சரித்து ரயிலில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.

இதனால் மற்ற பயணிகள் நிம்மதி அடைந்தனர். புகார் பதிவு செய்த சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த ரயில்வே மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்த பயணிகள், ரயிலில் பயணிக்கும் பெண்கள், மாணவிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ரயில்வே நிர்வாகம், காவல்துறைக்கு உள்ளது என்றனர்.

டயல் 139

போலீசார் கூறுகையில், ரயிலில் பயணிகள் தங்களது பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக 139 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். இது இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்த உதவி எண் ஆகும். பயணம் தொடர்பான விபரங்கள், பாதுகாப்பு பிரச்னை, உணவு, சுகாதாரம் தொடர்பான பிரச்னை, முன் பதிவு உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை, தகவல்களை இந்த எண்ணுக்கு டயல் செய்து பெற்றுக் கொள்ள முடியும் என்றனர்.

Related Stories: