கரூர் : கரூரில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் அதிகாலை நேர கடும் பனிப் பொழிவு காரணமாக அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.டிட்வா புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில வாரங்களாக கரூர் மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு கரூர் மாவட்டத்தில் இரூந்து வருகிறது.
இந்த பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதிலும், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதோடு, அதிகாலை நேரங்களில் நடைப் பயிற்சி (வாக்கிங்) மேற்கொள்ள செல்லும் அனைவரும் சற்று தாமதமாகத்தான் நடைபயிற்சியை மேற்கொள்கின்றனர். அந்தளவுக்கு பனிப் பொழிவின் தாக்கம் உள்ளது.
மார்கழி மாதம் வரை இதன் தாக்கம் இருக்கும். அதிகாலை வரை பனிப்பொழிவின் தாக்கம், 10 மணிக்கு பிறகு வெயில் என்ற இரண்டு விதமான சீதோஷ்ண நிலையில் கரூர் மாவட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
