×

பூமியை பச்சையாக்கும் விவசாயிகள் குறைந்த செலவில், அதிக லாபம் ஈட்ட மாட்டு பண்ணை, வெண்பன்றி வளர்ப்பு சிறந்தது

புதுக்கோட்டை, டிச.22: குறைந்த செலவில், அதிக லாபம் ஈட்ட மாட்டு பண்ணை, வெண்பன்றி வளர்ப்பு சிறந்தது என்று புதுக்கோட்டை மண்டல கால்நடை ஆராய்ச்சி மற்றும் கல்வி மைய பேராசிரியர் புவராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மாட்டு பண்ணை அமைக்கும் முன் தரமான பால் உற்பத்திக்கு சரிவிகித தீவன உற்பத்தி அவசியம். பண்ணை அமைப்பதற்குமுன் பசுந்தீவன உற்பத்தி 75, 90 நாட்களுக்கு முன் பயிரிடுதல் அவசியம். நாட்டு மாடுகள் வாங்குவதென்றால் சிந்து மற்றும் சிந்து கலப்பினமும், கலப்பின பசுக்கள் என்றால் ஜெஸ்ஸி இனமும் நம்நாட்டிற்கு மிகவும் உகந்தவையாகும். சந்தையில் மாடுகள் வாங்குவது தவிர்த்து அருகில் உள்ள பண்ணை மற்றும் நம் ஊரிலிருந்து 100 கி.மீ. தொலைவு வரை உள்ள மாடு வளர்ப்போரிடம் உள்ள பசுக்களையே வாங்க வேண்டும். பண்ணை அமையவுள்ள இடம் தண்ணீர் தேங்காமல் சற்று மேடாக இருக்க வேண்டும்.

குறிப்பாக பாலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.35க்கு மிகாமல் விற்பதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பின் பால்பண்ணையை ஆரம்பிக்காலம். இறுதியாக பால்பண்ணை அமைக்க விரும்புவோர் அம்மாவட்டத்தில் உள்ள கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை அணுகி முறையான பயிற்சி எடுத்தப்பின் பண்ணை ஆரம்பித்தல் சாலச்சிறந்தது.

வெண்பன்றிப்பண்ணை அமைக்க விரும்புவோர் செய்ய வேண்டியவை:குறைந்த முதலீடு, வேலை நேரம் குறைவு மற்றும் அதிக லாபம் என வெண்பன்றி வளர்ப்பில் சாதகமான அம்சங்கள் இருந்தாலும், அதன் இறைச்சிக்கான சந்தைப்படுத்த உள்ள வாய்ப்புகள் மற்றும் அதன் முக்கிய தீவனமான உணவு விடுதியில் மீந்த உணவு மற்றும் விடுதி கழிவு, திருமண மண்டப உணவு கழிவு என கிடைக்கும் பட்சத்தில் இப்பண்ணை லாபகரமானதாக அமையும்.
பண்ணை அமைக்க முறையான அனுமதி மற்றும் மாநகராட்சி, நகராட்சி எல்லைக்கு அப்பால் அமைக்க வேண்டும். பண்ணை ஆரம்பிக்கும் முன் கால்நடை பயிற்சி மையத்தில் முறையான பயிற்சி மற்றும் ஆலோசனை பெற வேண்டும். வெண்பன்றி பண்ணைக்கு நிறைவான தண்ணீர் வசதி அவசியம். மேலும் குட்டிகள் பராமரிப்பு, கிடா வளர்ப்பு மற்றும் சருமநோய் மேலாண்மை என நுண்ணியமாக அரசுப்பண்ணைகள் மற்றும் தனியார் வெண்பன்றி பண்ணைகளை பார்வையிட்டு பின் சொந்தமாக ஆரம்பித்தால் மிகுந்த பட்டறிவும், லாபகரமான பண்ணையாகவும் அமையபெறும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Pudukottai ,Puvarajan ,Pudukottai Regional Livestock Research and Education Centre ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு