4,14,809 பேருக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல்

கிருஷ்ணகிரி, டிச.22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 4,14,809 பேருக்கு காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளை, ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், முன்னாள் முதல்வர் கலைஞரால் கடந்த 23.7.2009ம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் ஒருங்கிணைந்து, கடந்த 23.9.2018ம் தேதி முதல் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. ஏழை, எளிய மக்கள் கூடுதல் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக, தமிழக முதல்வரால் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி உயர்த்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் 11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள் மற்றும் 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளை, கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம், 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் 27 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 லட்சத்து 14 ஆயிரத்து 809 குடும்பங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு, காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் பயனடையலாம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்று (ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான) ஆகிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண்.32ல் செயல்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட மையத்திதை அணுகி, இணையதளத்தில் பதிவு செய்து, காப்பீட்டு அட்டையை பெற்று பயன் பெறலாம்,’ என்றனர்.

Related Stories: