×

நியூசிலாந்துடன் 3வது டெஸ்ட் கவேம் சரவெடி: வெ.இண்டீஸ் பதிலடி; டிராவை நோக்கி பயணிக்கும் போட்டி

மவுங்கானுய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ், 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன் குவித்து பதிலடி தந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளில், நியூசிலாந்து 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டி, மவுங்கானுய் நகரில் கடந்த 18ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் 137, டெவான் கான்வே 227 ரன்கள் விளாசியதால், 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன்னுக்கு அந்த அணி டிக்ளேர் செய்தது. அதையடுத்து, 2ம் நாளின் பிற்பகுதியில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை துவக்கியது.

2ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 110 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், 3ம் நாளான நேற்று, முதல் இன்னிங்சை, வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜான் கேம்ப்பெல் 45 ரன்னில் வீழ்ந்தார். அதன் பின் மற்றொரு துவக்க வீரர் பிராண்டன் கிங் 63 ரன்னில் அவுட்டானார். பின் வந்த கவேம் ஹாட்ஜ் அட்டகாசமாக ஆடி ஆட்டமிழக்காமல் 109 ரன்னுடன் களத்தில் இருந்தார். பின் வந்தோரில் ஆலிக் ஆதனேஸ் 45, ஜஸ்டின் கிரீவ்ஸ் 43 ரன் எடுத்தனர். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ், 113 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன் எடுத்திருந்தது. இன்று 4ம் நாள் ஆட்டம் தொடர்கிறது. இன்னும் இரு இன்னிங்ஸ்கள் முழுமையாக ஆட வேண்டி இருப்பதால் இந்த போட்டி டிராவை நோக்கி செல்கிறது.

Tags : New Zealand ,Kavem Saravedi ,West Indies ,Maunganui ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...