×

சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 6வது மாடியில் சிக்கியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்; அரசு அலுவலகங்களில் இணைய சேவை பாதிப்பு

சென்னை: சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின் மிக முக்கியமான சாலையான அண்ணா சாலையில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலக கட்டிடம் உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 9:30 மணி அளவில், அலுவலகப் பணிகள் தொடங்க இருந்த நேரத்தில், கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேற தொடங்கியது. உள்ளே இருந்த ஊழியர்கள் புகையைக் கண்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால், அடர்த்தியான கரும்புகை நொடிப் பொழுதில் கட்டிடத்தின் மேல் தளங்களுக்கும் பரவியது.

தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே தேனாம்பேட்டை, எழும்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. கட்டிடத்தின் உள்ளே காற்றோட்டம் இல்லாததாலும், ஜன்னல்கள் அனைத்தும் கண்ணாடியால் மூடப்பட்டிருந்ததாலும் புகையினால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது, கட்டிடத்தின் 6வது மாடியில் ஊழியர் ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். கீழே கரும்புகை சூழ்ந்திருந்ததால் அவரால் கீழே இறங்க முடியவில்லை.

இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள், உயிரை பணயம் வைத்து ஆக்சிஜன் கவசங்களை அணிந்துகொண்டு உள்ளே சென்றனர். அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் அணிவித்து, பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். இந்த மீட்புப் பணி அங்கிருந்தவர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. கரும்புகை கட்டிடத்தில் இருந்த பிளாஸ்டிக் வயர்கள் மற்றும் ஏசி இயந்திரங்கள் எரிந்ததால், நச்சுத்தன்மை கொண்ட கரும்புகை வெளியேறியது. இதனால் வீரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. புகையை வெளியேற்ற வழி இல்லாததால், தீயணைப்பு வீரர்கள் சுத்தியல் மற்றும் ரம்பங்களைக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியேற்றினர். விபத்து பெரிதாகாமல் தடுக்க அலுவலகம் முழுவதற்கும் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது.

இரண்டாவது மாடியில் உள்ள சர்வர் அறை அல்லது கேபிள் வயர்கள் செல்லும் பகுதியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அங்கிருந்த குளிர்சாதன பெட்டிகள் வெடித்ததும் தீ வேகமாக பரவக் காரணமாக அமைந்தது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தினால் பல கோடி ரூபாய் மதிப்பிலான தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கோப்புகள் சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பிஎஸ்என்எல் லேண்ட்லைன், தொலைதொடர்பு சேவைகள், இணைய சேவைகள் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, சென்னையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலும் தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தீ விபத்து குறித்து சிந்தாதரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரியம் நேற்று வெளியிட்ட பதிவில், “அண்ணா சாலை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக, மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, ஆன்லைன் விண்ணப்ப சேவைகள், மின்கட்டண பணப் பரிவர்த்தனை மற்றும் கவுன்டர் மூலம் பணம் செலுத்தும் வசதிகள் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்னையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். சேவைகளை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக, தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags : Chennai ,Anna Salai ,BSNL ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...