×

ஜன.28ல் சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் ஐகோர்ட்டில் தேர்தல் பட்டியல் தாக்கல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் பெரிய அளவில் உணவு கூடம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தை நிர்வகிக்க தற்போது நிர்வாகிகள் இல்லை. தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்படாத நிலையில், சங்கத்தின் தேர்தலை நடத்தக்கோரி வழக்கறிஞர் வி.ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ல் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதற்காக வழக்கறிஞர்கள் குழுவை அமைத்து உத்தரவிட்டது. ஆனால், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்படாததால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், வாக்காளர் இறுதி பட்டியலை தயாரிக்கும் பணியில் சங்க நிர்வாகிக்கு உதவுவதற்காக வழக்கறிஞர்கள் எல்.சந்திரகுமார், ஆர்.செல்வம், ஆர்.கிருஷ்ணகுமார், திருவேங்கடம், பர்வீன் ஆகியோர் நியமித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு நீதிமன்றம் நியமித்த குழு தலைவர் சந்திரசேகரால் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டுறவு சங்ணங்களின் ேதர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி.சுந்தராமன் ஆஜராகி, தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு மற்றும் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தேர்தல் அறிவிப்பு ஜனவரி 2ம் தேதி வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 19ம் தேதி வெளியிடப்படும்.

வேட்புமனு தாக்கல் ஜனவரி 20ம் தேதியும் வேட்புமனு பரிசீலனை ஜனவரி 21ம் தேதியும் நடைபெறும். இறுதி வேட்பாளர்கள் பட்டியல் ஜனவரி 22ம் தேதி வெளியிடப்படும். இதையடுத்து, தேர்தல் ஜனவரி 28ம் தேதி நடத்தப்பட்டு அன்றே வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் ஜனவரி 29ம் தேதி அறிவிக்கப்படுவார்கள். சங்க தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் பிப்ரவரி 4ம் தேதி நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதி, தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் நியமித்த குழு தேர்தலை நடத்த உதவ வேண்டும். தேவைப்பட்டால் உயர் நீதிமன்ற காவல்நிலைய போலீசாரின் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் கோரலாம். தேர்தல் நடத்தியது தொடர்பான அறிக்கையை பிப்ரவரி 5ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Chennai ,Lawyers Cooperative Society ,Madras High Court ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...