கும்பகோணம், டிச.20: 63வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களை அமைச்சர், எம்எல்ஏ, எம்.பி உள்ளிட்டோர் வாழ்த்தினர். ஆந்திரபிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 63வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி சுற்றில் தமிழ்நாட்டின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் பகுதியில் இருந்து சென்ற வீரர்கள் பதக்கங்களை பெற்றனர்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து கும்பகோணம் திரும்பிய விளையாட்டு வீரர்களான மதுரை விவசாய ஆராய்ச்சி கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவர் விஸ்வரூபன், கோயம்புத்தூர் கற்பகம் கல்லூரி மாணவர் அகிலேஷ், கும்பகோணம் ஜிஎஸ்கே சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் முகமது முக்தசீம், க்ரிஷிகேஷ், நிஷாந்த், வெள்ளி பதக்கம் பெற்ற சிவஅக்ஷயா, நிகிதா மற்றும் சீனியர் பெண்கள் பிரிவு டர்பி போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற கோயம்புத்தூர் சி.ஐ.டி கல்லூரி மாணவி கான்யா மற்றும் சீனியர் விளையாட்டு வீரர்கள் சுதர்சன், சோமேஷ் ஆகியோரை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர். அப்போது திமுக மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், தேவராஜ் மற்றும் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
மேலும் விளையாட்டு வீரர்கள் தஞ்சாவூர் சென்று பயிற்சி எடுத்து கொள்வதாகவும், அதனால் கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதியில் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
