மாணவர் அமைப்பு தலைவர் மரணம் எதிரொலி: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை

டாக்கா: வங்கதேசத்தில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உயிரிழந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. வங்கதேசத்தில் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பார் ஷரீப் உஸ்மான் ஹாதி பிப்ரவரியில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வேட்பாளராக களம் இறங்குகிறார். கடந்த வாரம் டாக்காவின் பிஜய்நகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை ஷரீப் தொடங்கினார். அப்போது முகமுடி அணிந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவரது தலையில் குண்டுபாய்ந்தது. வங்கதேசத்தில் சிகிச்சைக்கு பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 6 நாட்களாக உயிருக்கு போராடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷரீப் உயிரிழந்தார். அவர் உயிரிழப்பை மஞ்ச் அமைப்பு முதலில் அறிவித்தது. அவரது உடல் நேற்று சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது.

வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், இன்குலாப் மஞ்ச் தலைவர் ஷரீப் மரணமடைந்ததை தொலைக்காட்சி மூலமாக நாட்டுமக்களுக்கு உறுதிப்படுத்தினார். இதனை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல்கள் மற்றும் நாசவேலைகள் நடந்தது. சட்டோகிராமில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரியின் இல்லத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சாலைகளில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் முன்னணி செய்திதாள் நிறுவனங்களை சேதப்படுத்தினார்கள். மேலும் ராஜ்ஷாஹி நகரில் இருந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கலைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தையும் போராட்டக்கார்கள் இடித்தனர்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 32தன்மண்டி அருங்காட்சியகத்தையும் சுத்தியல்களால் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினார்கள். போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் 12 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்து நபர் அடித்து, எரித்துக் கொலை;
வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள பாலுக்கா உபசிலாவில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தீபு சந்திர தாஸ்(30) என்ற இளைஞர் இஸ்லாம் மதம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலைக்கு வெளியே நின்ற தீபுவை சரமாரியாக தாக்கியது. பின்னர் ஒரு மரத்தில் அவரை தூக்கிலிட்டு கொன்றது. எனினும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் உடலை நெடுஞ்சாலைக்கு இழுத்து சென்று தீயிட்டு கொளுத்தியது. இது குறித்த வீடியோ வைரலான நிலையில், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வன்முறைக்கு இடமில்லை;
வங்கதேச அரசு இந்து நபர் அடித்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘புதிய வங்கதேசத்தில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை. வன்முறை, அச்சுறுத்தல், தீ வைப்பு மற்றும் பொது சொத்துக்களை அழித்தல் போன்ற அனைத்து செயல்களையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூரமான குற்றத்தை செய்தவர்கள் தப்பிவிட மாட்டார்கள். இதுபோன்ற சில ஓரங்கட்டப்பட்ட சக்திகளால் செய்யப்படும் கும்பல் வன்முறையின் அனைத்து வடிவங்களையும் பொதுமக்கள் எதிர்த்து நிற்கவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கதேச தூதரகம் அருகே போராட்டம்;
திரிபுராவில் அகர்தலாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தின் அருகே திப்ரா மோதா கட்சியின் இளைஞர் பிரிவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் வங்கதேச தலைவர் ஒருவர் வடகிழக்கு குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வங்கதேச அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினார்கள். திப்ரா மோதா தலைவர் பிரத்யோக் கிஷோர் மாணிக்ய தேப்பர்ம தனது எக்ஸ் தள பதிவில், ‘‘வங்கதேசத்தில் உள்ள இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு நாங்கள் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். பாகிஸ்தான் ராணுவத்தின் ஒடுக்குமுறையில் இருந்து வங்கதேசத்தை விடுவித்தது இந்தியா தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிக்கலான உறவு எம்.பி.க்கள் குழு அறிக்கை;
வெளியுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு இந்தியா-வங்கதேச உறவின் எதிர்காலம் என்ற தலைப்பிலான தனது அறிக்கையை மக்களவையில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை சிக்கலானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த அரசியல் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளன. வன்முறைச்சம்பவங்கள், சிறுபான்மையினர், பழங்குடி சமூகங்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் போன்றோர் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் சாதாரணமாகிவிட்டன என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: