நல்லம்பள்ளி,டிச.20: தர்மபுரி அருகே தடங்கம் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அடுத்துள்ள தடங்கம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி(52). இவர் சொந்த வேலை காரணமாக, கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு சென்ற நிலையில், நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம், 2 வெள்ளி கால் கொலுசு, எல்இடி டிவி ஆகியவை திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அதியமான் கோட்டை இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல், அருகில் உள்ள வளர்மதி(50) என்பவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை திருடிச்சென்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் அதியமான் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருகில் உள்ள வீடுகளில் பாதுகாப்பிற்காக பொருத்தி உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
