×

எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 8 மசோதா நிறைவேற்றம்; அவை நடவடிக்கையில் சாதனை

 

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றத்துடன் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், 15 அமர்வுகளுடன் இன்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் மக்களவை 111 சதவீதமும், மாநிலங்களவை 121 சதவீதமும் செயல்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன. மாநிலங்களவைத் தலைவராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் கூட்டத்தொடர் இதுவாகும். அதேபோல் மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா வழிநடத்தினார்.

மொத்தம் 8 முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்கூட்டத்தொடரின் மிக முக்கிய நிகழ்வாக, கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மாற்றாக, ‘விக்சித் பாரத் கிராம ரோஸ்கர் அவ்ர் மானவ் கரிமா’ என்ற புதிய மசோதா நிறைவேற்றப்பட்டது. இது கிராமப்புறத்தினருக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.

ஆனால், ‘இம்மசோதா கிராமங்களுக்கு எதிரானது மற்றும் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கிறது’ என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் ‘சாந்தி’ மசோதா மற்றும் காப்பீட்டுத் துறை மசோதாக்களும் நிறைவேறின. டெல்லி காற்று மாசு குறித்த விவாதம் நடைபெறாமலேயே அவைகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

Tags : Parliament ,New Delhi ,winter ,of Parliament ,
× RELATED சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ...