×

கேரளாவுக்கு கனிம கடத்தல்: அதிமுக கவுன்சிலர் கைது: உடந்தையாக இருந்த 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

அருமனை: கேரளாவுக்கு கனிமங்கள் கடத்தல் தொடர்பாக அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட களியலை சுற்றி 3 கல்குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகளில் அதிகளவில் பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்பட்டதாக புகார்கள் கூறப்படுகிறது. மேலும், சக்தி வாய்ந்த வெடிபொருட்களால் பாறைகளை உடைப்பதால் சுற்றுவட்டார பகுதி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. மக்களின் தொடர் புகார் காரணமாக குவாரிகளின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

பல வருடங்கள் செயல்படாமல் இருந்த குவாரிகளில் கட்டச்சல் பகுதியில் உள்ள குவாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல்பட தொடங்கியது. எனினும் குவாரியில் பாறைகள் உடைக்க அனுமதி இல்லாததால், முதலில் வெளியில் இருந்து குண்டு கற்கள் கொண்டு வரப்பட்டு ஜல்லி, பொடியாக மாற்றி விற்பனை செய்து வந்தனர். எனினும் அனுமதி இல்லாத குவாரியில் இருந்து பாறை உடைக்கப்படுவதாகவும், முறையான பாஸ் இல்லாமல் கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன.

இந்தநிலையில் எஸ்.பி. ஸ்டாலின் கட்டச்சல் குவாரியில் அதிரடியாக ஆய்வு செய்தார். அப்போது, விதிமீறல் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குவாரியில் பணியில் இருந்த மேற்பார்வையாளர் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், கடையாலுமூடு பேரூராட்சி 18வது வார்டு அதிமுக கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விதிமீறல் தொடர்பாக பிலாந்தோட்டத்தை சேர்ந்த குமார், நிலத்தின் உரிமையாளர் மற்றும் வாகன உரிமையாளர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே, சட்டவிரோதமாக கேரளாவுக்கு கனிமங்கள் உடைத்து கடத்தப்படுவதற்கு உடந்தையாக இருந்த கடையாலுமூடு காவல் நிலைய எழுத்தர் உள்பட 2 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். எஸ்.பி நடவடிக்கை எடுத்த பின்னரும், நேற்றும் குவாரியிலிருந்து எப்போதும் போல், எம்.சான்ட், ஜல்லி கற்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Arumani ,Supreme Councillor ,Kerala ,Kalkuvaris ,Kumari district ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது