* நீண்ட கால பயிற்சியாளரை பிரிந்தார் அல்காரஸ்
பார்சிலோனா: டென்னிஸ் உலகில் நம்பர் 1 வீரராக திகழும், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22), கடந்த 6 ஆண்டுகளாக தனக்கு பயிற்சி அளித்து வந்த பயிற்சியாளர் ஜுவான் கார்லோஸ் பெரெரோ உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். அல்காரஸ், தனது 16வது வயதில் இருந்து ஜுவானிடம் பெற்ற பயிற்சிகள் காரணமாக, 6 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் ஆகி சாதனை படைத்தார். 8 மாஸ்டர்ஸ் 1000 போட்டிகள் உட்பட 24 போட்டிகளில் அல்காரஸ் சாம்பியன் ஆகி, கடந்த 2022ல் தனது 19வது வயதில் உலகின் நம்பர் 1 வீரராக உருவெடுத்து சாதனை படைத்தார்.
* டைகர்ஸ் ஆப் பெங்கால் அணியை வாங்கிய கங்குலி
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) போட்டிகளில் ஆடும் அணிகளில் ஒன்றான டைகர்ஸ் ஆப் பெங்காலின் இணை உரிமையாளராக சேர்ந்துள்ளார். ஐஎஸ்பிஎல் போட்டிகள், வரும் 2026ம் ஆண்டு, ஜனவரி 9ம் தேதி துவங்கி, பிப்ரவரி 6ம் தேதி வரை நடைபெற உள்ளன. டென்னிஸ் பந்துகளை கொண்டு ஆடப்படும் இந்த கிரிக்கெட் போட்டிகள், தலா 10 ஓவர்களை கொண்ட, டி10 போட்டிகளாக இருக்கும்.
* டெவான் கான்வே 178 ரன் நாட்அவுட்
மவுங்கானுய்: நியூசிலாந்தின் மவுங்கானுய் நகரில், நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே, 3வது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. முதலில் களமிறங்கிய துவக்க வீரர்கள் கேப்டன் டாம் லாதம், டெவான் கான்வே, பொறுப்புடனும், நிதானத்துடனும் ஆடி ரன்களை குவித்தனர். இந்த இணை 323 ரன்கள் குவித்திருந்த நிலையில், டாம் லாதம் 137 ரன்னில் ஆட்டமிழந்தார். டெவான் கான்வே தொடர்ந்து சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல், 25 பவுண்டரிகளுடன் 178 ரன் விளாசினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசி. ஒரு விக்கெட் இழப்புக்கு 334 ரன் எடுத்திருந்தது. இன்று, 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
