திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே அதிமுகவினர் அரசியல் பிரசாரம் மேற்கொண்டதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே அரசியல் சார்ந்த பிரசாரங்கள், விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்களில், கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், கொடிகள், ஸ்டிக்கர்கள் இருந்தால் அதனை அகற்றியபிறகுதான் திருமலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஏழுமலையான் கோயில் எதிரே அரசியல் சார்ந்த மற்றும் திரைப்பட பாடல்களுக்கு ‘ரீல்ஸ்’ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியை சேர்ந்த அதிமுக மாணவர் அணியினர் வரும் 2026ம் ஆண்டு ஏழுமலையான் ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என பேனர் வைத்துக்கொண்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
மேலும் அலிபிரி சோதனை சாவடியில் எவ்வாறு இந்த பேனரை சோதனை செய்யாமல் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்தும் விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தேவஸ்தான முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழுமலையான் கோயில் எதிரே அரசியல் கட்சி தலைவர் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைத்து ‘ரீல்ஸ்’ எடுத்து பதிவிட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே இதனை காட்சிப்படுத்தி பதிவு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
