×

அண்ணாமலை போராட்டத்திற்கு அனுமதி ரத்து; திருப்பூர் போலீசார் நடவடிக்கை

 

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பை கொட்டும் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அண்ணாமலை திருப்பூரில் இன்று மாலை நடத்த இருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு வந்த குப்பைகள் பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் பாறைக்குழிகளில் கொட்ட நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சிக்கு சொந்தமான இடுவாய் சின்ன காளிபாளையம் பகுதியில் உள்ள இடத்தில் இயற்கைக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் சிமெண்ட் தரைத்தளம் அமைத்து திடக்கழிவு மேலாண்மை சட்ட விதிகளின்படி குப்பைகள் கொட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடுவாய் சின்ன காளிபாளையம் கிராம மக்கள் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து குப்பைகளை கொட்டலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மாநகராட்சி குப்பைகளை கொட்ட சென்றபோது பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 4 மணியளவில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்தனர். ஆனால் காவல்துறையிடம் 3 நாட்களுக்கு முன்னதாக அனுமதி கேட்டு கடிதம் வழங்க வேண்டிய நிலையில் அவசர அவசரமாக நேற்று தான் கடிதம் வழங்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திய நிலையில் அதற்கு எதிராக நடத்தக்கூடிய போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

 

Tags : Annamalai ,Tiruppur ,Tiruppur Municipal Corporation ,Annamalai Tiruppur ,Municipality ,
× RELATED புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்...