×

மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்

 

மும்பை: மேம்பட்ட மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த பரிசோதனைகளை செய்ய குறைந்தது ரூ.10,000 செலவாகும் நிலையில், அதை விட பத்து மடங்கு குறைவாக வெறும் ரூ.1,000க்கு வழங்கும் முயற்சியில் ரிலையன்ஸ் ஈடுபட்டுள்ளது. மரபணு நோய்களைக் கண்டறிதல், நோய்களின் அபாயத்தை மதிப்பிடுதல், சரியான சிகிச்சையைத் தீர்மானித்தல், பரம்பரை நோய்களை தடுத்தல் உள்ளிட்டவைகளுக்கு மரபணுப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மீண்டும் ஒரு துறையில் புரட்சியை உருவாக்க முடிவு செய்துள்ளது. மருத்துவ துறையில், மருத்து பரிசோதனை பிரிவு மிகப்பெரிய வர்த்தக சந்தையை கொண்டு உள்ளது. இதை கண்டறிந்து பல வருடங்களுக்கு முன்பே இதற்காக காய்களை நகர்த்தி வைத்தார் முகேஷ் அம்பானி.

இதன் விளைவாக இந்திய மக்களுக்கு மரபணு டெஸ்ட்களை (genomic tests) வெறும் ரூ.1,000க்குள் வழங்க திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ். தற்போது சந்தையில் இத்தகைய Genetic tests-களின் அடிப்படை விலை ரூ.10,000 அளவில் உள்ளது. ஆனால் ரிலையன்ஸ் இந்த பரிசோதனைக்கான விலையை பத்து மடங்கு குறைக்க முடிவு செய்துள்ளது. 2016இல் ஜியோ மூலம் டெலிகாம் துறையை மாற்றியது போல, இப்போது ஜீனோம் டெஸ்ட் சந்தையை ரிலையன்ஸ் மாற்ற உள்ளது. இது சுகாதார துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

ரிலையன்ஸ் இந்த புதிய முயற்சிக்கு பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ட்ராண்ட் லைஃப் சயின்ஸஸ் (Strand Life Sciences) நிறுவனத்தை பயன்படுத்துகிறது. 2021இல் ரூ.393 கோடிக்கு ரிலையன்ஸ் இந்த நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஸ்ட்ராண்ட் நிறுவனம் ஜீனோம் சையின்ஸ் மற்றும் சிறப்பு ஹெல்த்டயாக்னாஸ்டிக்ஸ் துறையில் நிபுணத்துவம் கொண்டது.

இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பம் மூலம் ரிலையன்ஸ் ஜீனோம் டெஸ்ட்களை மலிவு விலையில் வழங்க உள்ளது. இது இந்தியாவில் ஜீனோம் டெஸ்ட்களை பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக்க மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரத்தம், உமிழ்நீர் அல்லது உடல் திசுக்களை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இது ஒருவரின் உடலில் நோய் வரும் ஆபத்து, புற்றுநோய் வளர்ச்சி, தனிப்பட்ட சிகிச்சை திட்டம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள உதவுகிறது.

மரபணு, புரதம், குரோமோசோம் போன்றவை ஒருவரின் உடல் நலத்தை எப்படி பாதிக்கின்றன என்பதை இந்த பரிசோதனை மூலம் கண்டறியப்படும். இது தனிப்பட்ட மருத்துவத்துக்கு (personalised medicine) அடித்தளமாக விளங்குகிறது. தற்போது இது விலை உயர்ந்தது என்பதால் அதிகப்படியான மக்கள் இதை பயன்படுத்த முடியவில்லை. இதன் விலை குறையும் பட்சத்தில் பல கோடி மக்கள் இதை பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும்.

 

Tags : Reliance ,Mumbai ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...