ஆலமரத்தை வெட்ட நினைக்கிறாய்… அது முடியாது: எங்ககிட்ட பம்மாத்து வேலை வேண்டாம் தம்பி… இதோடநிறுத்திக்கோங்க… அன்புமணிக்கு ராமதாஸ் கடும் எச்சரிக்கை

திண்டிவனம்: ‘எங்ககிட்ட இந்த பம்மாத்து வேலைகள் எல்லாம் வேண்டாம் தம்பி, இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ என உட்கட்சி விவகாரத்தால் மகன் அன்புமணியை, ராமதாஸ் கடுமையாக எச்சரித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாநில நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்குபின் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:
பாமகவில் விருப்ப மனு வாங்குவது, ஊர்வலம் போவது, கூட்டம் நடத்துவது, இப்படி இந்த மாதிரியான வேலைகளை எல்லாம் செய்து வருவது தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெறாத ஒரு புதுமை. இதற்கு முன்னாடி இப்படியெல்லாம் நடந்தது இல்லை. ஆனால் அன்புமணி என் பெயரை சொல்லி, என் படத்தை போட்டு, பாமக கொடியை உபயோகிப்பது வேதனை அளிக்கிறது. இதை அன்புமணி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த நிர்வாகக் குழுவில் பேசியவர்கள் சொன்னார்கள், வன்மையாக கண்டித்தார்கள்.

அன்புமணி வாய்திறந்தால் பொய், ஆயிரக்கணக்கான பொய். கூட்டணி பேசுவதற்கு இந்த நிர்வாகக்குழு எனக்கு முழு அதிகாரம் கொடுத்திருக்கிறது. இந்த மாதம் 28ம் தேதி பொதுக்குழு சேலத்தில் நடக்கிறது. இதிலும் அதிகாரம் கொடுக்க வேண்டும். இப்படி ஜனநாயக நெறிப்படி, முறைப்படி இந்த கட்சியை நாங்கள் வளர்த்து வருகிறோம். நான் சொல்ற மாதிரி, —– கையிலே கிடைத்த பூமாலை என்று சொல்வார்கள். அதற்கு முன்னால் இருக்கும் வார்த்தையை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள். அதை என் வாயில் சொல்வது மிக அசிங்கமாக இருக்கிறது. அந்த பொய்யர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கும் இந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை சொல்லுபவன் இந்த கட்சியை உருவாக்கியவன், பாடுபட்டவன்.

96 ஆயிரம் கிராமங்களுக்கு வியர்வை சிந்தி உழைத்தவன். இன்றைக்கு அது பெரிய ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. அந்த ஆலமரத்தையே வெட்ட நினைக்கிறாய். அந்த ஆலமரத்தில் உள்ள கிளைகளை வெட்ட பார்க்கிறாய்… உன்னால் அது முடியாது. ஒட்டுமொத்த மக்கள் பாமகவில் இருக்கின்ற மக்கள் மட்டுமல்ல. கட்சியை சாராதவர்களும் என்னை வெகுவாக விரும்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள். அதனால் இதை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், அந்த பம்மாத்து வேலை செய்பவர்களையும் இந்த நேரத்திலே எச்சரிக்கிறேன். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆக இது வேண்டாம் தம்பி… இந்த விபரீத விளையாட்ட பொதுவாக இருக்கிற மக்கள் திட்டி, உன் காதிலே விழுந்தாலும் நீ கண்டுகொள்வது இல்லை.

டெல்லியில் நடந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. டெல்லி நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. தவறு செய்த தேர்தல் கமிஷன் அதை புரிந்து கொண்டு சரியான திசையிலே தீர்ப்பை சொல்லியிருக்கிறது. முதலில் தவறு செய்துவிட்டது. தவறான புள்ளி விவரங்களை அவர்கள் கொடுத்து தேர்தல் கமிஷனையே ஏமாற்றியிருக்கிறார்கள். அப்போது யாரைதான் ஏமாற்ற மாட்டார்கள். கூட்டணி பற்றி கேட்பதற்கு நீங்கள் ஆவலாக இருக்கிறார்கள். வெற்றி கூட்டணி நிச்சயமாக அமைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

விருப்ப மனு எப்போது?
விருப்ப மனு வாங்கும் திட்டம் எதாவது இருக்கிறதா? என்று கேள்விக்கு, ‘விருப்ப மனு வாங்குவதற்கு இப்ப என்ன இருக்கிறது. செயற்குழுவின் அனுமதி வாங்கணும். பொதுக்குழு அனுமதிதான் இறுதியில். பொதுக்குழு என்ன சொல்லுதோ அந்த அனுமதி வச்சுதான் எந்த முடிவும் எடுக்க முடியும். இப்போது விருப்ப மனு வாங்கத் தேவையில்லை. அந்த பம்மாத்து வேலை எல்லாம் எங்களுக்கு தெரியாது’ என்று ராமதாஸ் தெரிவித்தார்.

Related Stories: