டெல்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி : உச்சநீதிமன்றம்

டெல்லி : டெல்லியில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காற்று மாசுவால் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேலையில்லாதவர்களுக்கு அரசு உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார். அதனைத் தொடர்ந்து காற்று மாசுபட்டால் சிறுவர்களும் முதியவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் காற்று மாசுபாட்டை குறைக்க வேண்டுமெனில் தற்காலிக நடவடிக்கைகளை விட பரந்த, நீண்ட காலத் திட்டமிடல் தேவைப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளிகளுக்கு நேரடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். டெல்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி அடைந்து விட்டதாக கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், இவ்வாண்டைப் போல் அடுத்த ஆண்டும் காற்று மாசு ஏற்படலாம், அரசு, முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தடுக்க அக்டோபர் முதல் ஜனவரி வரை டெல்லியை சுற்றி உள்ள சுங்கச் சாவடிகளை மூடலாம் என்றும் ஆலோசனை வழங்கினர். காற்று மாசை தடுப்பது குறித்து டெல்லி மாநகராட்சி, டெல்லி அரசு, காற்று தர மேலாண்மை ஆணையம் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: