நன்றி குங்குமம் தோழி
மனநல ஆலோசனை என்றதுமே நம் மனதில் தோன்றுவது, மருத்துவமனை சூழல்… நீண்ட நேரக் காத்திருப்பு… அங்கு செல்ல உருவாகும் தயக்கம் இவைதான். இவற்றை எல்லாம் உடைப்பதே ‘மைன்ட் கஃபே’ வாக்-இன் மாடல்.‘‘சுருக்கமா புரிகிற மாதிரி சொன்னால், எப்பவெல்லாம் நமக்கு மனசு சரியில்லாமல் போகிறதோ, அப்பவெல்லாம் காஃபி சாப்பிடுகிற மாதிரி மனநல ஆலோசகர்களை பார்க்கச் செல்வது, ரிலாக்ஸ்டாய் அமர்ந்து அங்கிருக்கும் உளவியல் நிபுணர்களிடம் பேசுவது’’ என பேச ஆரம்பித்தவர்கள், சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி வரும் ‘மைன்ட் கஃபே’ மனநல மையத்தின் இயக்குநர்களான மனநல மருத்துவர் சுமதி சந்திரசேகரன் மற்றும் உளவியல் நிபுணர் காயத்ரி இருவரும்.
‘‘நமது மனநிலை என்பது வானிலை மாதிரி. எப்ப வேணா மாறலாம். சில சமயம் மனசு பாரமா யார்கிட்டயாவது பேசணும்னு தோணும். சரி, மனதை சரி பண்ண நல்ல உளவியர் நிபுணர் ஒருவரைத் தேடிப் பிடித்து சந்திக்க நினைத்தால் அப்பாயின்மென்டிற்கு வாரக் கணக்காய் காத்திருக்கணும். இந்த காத்திருப்பு நேரம்தான் மனநல பராமரிப்பில் நாம் கவனிக்கத் தவறும் மிகப் பெரிய அபாயமாய் மாறுகிறது.
மனரீதியாக ஒருவருக்கு உதவி தேவைப்படுகிற அந்த முக்கியமான நேரத்தில், ஒரு வாரம், இரண்டு வாரம் கழித்து வரச் சொல்வதெல்லாம்… கை முறிவுக்கு ஒரு வாரம் கழித்து கட்டுப் போடுகிற மாதிரி. இடைப்பட்ட நேரத்தில் மனதுக்குள் சின்னதாக ஆரம்பித்த பிரச்னை வளர்ந்து பெரியதாய் மாற வாய்ப்பிருக்கிறது. தேவைப்படுகிற நேரத்தில் கிடைக்காத உதவி, நமது பிரச்னைய தீர்ப்பதற்கு பதிலாக கூடுதல் சிக்கலாக அதை மாற்றிவிடும். இந்தப் பிரச்னையை சரி செய்ய உருவானதே எங்களின் மைன்ட் கஃபே மனநல ஆலோசனை மையம்.
நம்மைப் பொறுத்தவரை காஃபி ஷாப் என்பது நமக்கான ரிலாக்சேஷன். நண்பர்களோடு அரட்டை. பிறகு நிம்மதி கொடுக்கிற இடமென, நம் மனதை தயார் செய்கிற விஷயம். அதுவே மருத்துவமனை என்றால் நோய், பதற்றம், சிகிச்சை என பயம் நம்மைத் தொற்றும். மைன்ட் கஃபேவின் முக்கிய நோக்கமே ஆலோசனையை ஆரம்பிக்கும் முன், சூழலை மாற்றுவது. இதன் மூலம் வருகிற நபரின் மனநிலையை நேர்மறையாக மாற்றுவது. அதாவது, மனநல பராமரிப்பை மருத்துவமனை சுவர்களுக்கு வெளியே கொண்டு வந்து, எளிதில் அணுகுகிற ஒன்றாய் இயல்பானதாக ஆக்குவது.
இதற்கென வசதியாக அமர இருக்கைகள், மனதை ஒருநிலைப்படுத்தும் மண்டலா ஆர்ட், காதுக்கு மெல்லிய இதமான இசை இவற்றுடன் தெரபிஸ்டுகள் பயிற்றுவிக்கிற தியானம், ரிலாக்சேஷன் தெரபிகளும் உண்டு. அப்படியே ஒரு ரெஸ்டாரென்ட் செட்டப்பில், இதமாக அருந்த க்ரீன் டீ, மசாலா டீ, சிறு தானியங்களில் செய்த சிலவகை சிற்றுண்டி உணவுகளும் கஃபேயில் கிடைக்கும். நீங்கள் விரும்பியதை தேர்ந்தெடுத்து அருந்தியவாரே மனநல ஆலோசகரிடம் ரிலாக்ஸ்டாகப் பேசலாம். எங்களின் இந்த முன் சிகிச்சை ஏற்பாடு, சில சமயம் சிகிச்சையை விட சக்தி வாய்ந்ததாய் இருப்பதுடன், உங்கள் பிரச்னையை கண்டுபிடிக்க பாதுகாப்பான சூழலை நாங்கள் உருவாக்கிக் கொடுக்கிறோம் என்ற நம்பிக்கையையும் உங்களுக்கு ஏற்படுத்தும்.
இங்கு வருபவர்கள் மனசு விட்டு பேசும் போதே அவர்களின் பிரச்னை அவர்களுக்கே புரிய ஆரம்பிக்கும். சில சமயம் தீர்வுகள் கூட அவங்களுக்கே தோணும். தங்களின் உணர்ச்சிகளை ஆரோக்கியமாய் தாங்களே கையாளக் கற்றுக்கொள்ளலாம். எப்படி வெளியில் அழகாக நாம தெரியணும்னு பார்லர் போறோமோ? உடம்பு ஹெல்த்தியா இருக்க எக்சர்சைஸ் பண்றோமோ? அதேமாதிரி உள்ளிருக்கும் நம்முடைய எமோஷனல் கன்ஃபியூஷனல் தேக்கங்களை சரி செய்து மனதை தெளிவா, அமைதியா வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
ஒருவரின் பிரச்னை பூதாகரமாகி வாழ்க்கையை முடக்கும் முன், அதனை அட்ரஸ் செய்து சரி செய்ய முயற்சி பண்ணுவதுதான் எங்களின் வேலை. சின்னதாய் இருக்கும் போதே உணர்ச்சிகளை சரியாக டீல் செய்துவிட்டால், பெரிய பிரச்னைகள் வராமல் தடுத்துவிடலாம். இங்கு நாங்கள் கொடுக்கின்ற குறிப்பிட்ட கவுன்சிலிங் முறை, சரியான இடத்துக்கு உங்களை வழிகாட்டுவதுடன், பிரச்னை முத்தி மென்டல் இல்னஸாக அது மாறுவதற்கு முன், ஆரம்பக் கட்டத்திலேயே கையாளக் கற்றுத் தரும்.
நம் உடம்போட நெர்வஸ் சிஸ்டம், அதாவது, நரம்பு மண்டலம் வழியாக, சில உணர்ச்சிகள் முழுசா வெளிப்படாம அங்கங்க தேங்கி நிற்பதுமே காரணங்கள்தான். அதிர்ச்சியோ… பயமோ… கோபமோ வரும் போது நம் உடம்பு சண்டையிடுகிற நிலை அல்லது ஓடிவிடும் நிலைக்கு ரெடி ஆகும். பல சமயங்கள் நமது சமூகக் கட்டமைப்பு காரணமாக, நமது உணர்வை முழுதாய் வெளிக்காட்டாமல் முடக்குகிற நிலையும் உருவாகும். இவ்வாறு அடக்கப்படும் எனர்ஜிகள் நமது உடலின் நெர்வஸ் சிஸ்டத்தில் ஸ்டக் ஆகி தங்கிவிடுகிறது. நம்முடைய பல பிரச்னைகளுக்கும், மன அழுத்தங்களுக்கும், ஏன் சில சமயம் நம்ம உடல் உபாதைகளும்கூட இது காரணமாக அமையும்.
ஒருகட்டத்தில் இந்த எமோஷனல் எனர்ஜி சம்பந்தமே இல்லாமல் தானாகத் தூண்டப்பட்டு ஒருவரது இயல்பான செயல்பாட்டை தடுக்க ஆரம்பிக்கும். இது அவருக்குத் தெரியாமலே நடக்கிறது. இந்த மாதிரி தேங்கிப் போன எனர்ஜியை ஸ்டக் எமோஷனல் எனர்ஜி என்கிறோம். இதை வெளியேற்றுவதும் ரொம்ப முக்கியம். அந்த ஆற்றல் வெளியேறினால்தான் நடைமுறை சூழலுக்கு இயல்பாக நாம் ரியாக்ட் பண்ண முடியும். இதுக்குதான் சில பிஸிகல் ஆக்டிவிட்டிஸ், யோகா மாதிரியான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
ஆதிகால மனிதனுக்கு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க உருவான மூளை கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்து இன்றைக்கு இருக்கிற பிரச்னைகளை எப்படி பார்க்கிறது என யோசித்தால், இன்றைக்கு சிங்கம், புலி போன்ற கொடிய மிருகம் நம்மைத் தாக்கும் என்ற பயமில்லை. ஆனால், ஆபீஸ் மீட்டிங், தேர்வுகள், டிராஃபிக் ஜாம் கூட சிங்கம், புலி தாக்க வருகிற மாதிரியான மிகப்பெரிய ஆபத்தாய் மாறி இருக்கிறது. அதனாலதான் மூளை சில நேரம் ஃப்ளைட், சில நேரம் ஃப்ரீஸ் என எதிர்வினைகளை கொடுக்கத் தொடங்குது.
இந்த எதிர்வினைகள் எங்கிருந்து வருகிறதென புரிஞ்சுக்கணும். நாம கார் ஓட்டுவது மாதிரி ஆக்ஸலேட்டரையும் பிரேக்கையும் கட்டுப்படுத்த கத்துக்கணும். இதற்குத்தான் மூச்சுப் பயிற்சி, தியானம் மாதிரியான விஷயங்கள் கை கொடுக்குது. இவை அமைதி எனும் ஸ்விட்சை ஆன் செய்ய உதவும்.
இங்கு மன ஆரோக்கியம் என்பது மனநோய் இல்லாத நிலை மட்டுமல்ல, நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கான கருவியும். அதாவது, சரியான கெரியரைத் தேர்ந்தெடுக்க, வேலையில் இன்னும் கூடுதல் சிறப்பாய் செயல்பட, வாழ்க்கையை கூடுதல் மகிழ்ச்சியுடன் மாற்ற என, இல்னெஸ் மாடலில் இருந்து வெல்னெஸ் மாடலுக்கு மாற்றுவது. சுருக்கமாய் சொன்னால், பிரச்னை வந்த பிறகு சரி செய்வதை விட வரும் முன் தடுப்பது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிம் செல்கிற மாதிரி, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜிம் இந்த மைன்ட் கஃபே.
சில சமயம் பிரச்னைகளோட ரூட் ரொம்ப ஆழமா இருக்கும். சிலரோட இப்போதைய கஷ்டங்களுக்கு காரணம் பல வருஷத்துக்கு முன்னாடி நடந்த அதிர்ச்சியான சம்பவங்களாகவும் இருக்கலாம். பிடிஎஸ்டி (Post traumatic stress disorder) அதாவது, அதிர்ச்சியோட பாதிப்பு அந்த நேரத்துல சரியா வெளிப்படாம, உடம்புக்குள்ளேயும் மனசுக்குள்ளேயும் அப்படியே அமுங்கிடும். வருடங்கள் கழிந்து சம்பந்தமே இல்லாத வேற பிரச்னைகளாக, உதாரணத்துக்கு காரணமே இல்லாத பயம், கோபம், இல்லை உறவு சிக்கல்கள் இந்த மாதிரியாகவும் அது வெளிப்படும். இதை கவனிக்காமல் அப்படியே விட்டால் அது லைஃப்பையே பாதிக்கும்.
நிகழ்கால நடைமுறை சவால்களுக்கு கவுன்சிலிங். கடந்த கால பிரச்னைகளுக்கு தெரபி. பயாலஜிக்கல் காரணிகள் அல்லது மருந்துகள் தேவைப்பட்டால் சைக்யாட்ரிஸ்ட். சுருக்கமா சொல்லணும்னா நீங்க எங்கு இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே நீங்கள் எங்கு போக வேண்டும் என நாங்கள் முடிவு பண்ணுவோம். இதில் எங்களின் ரோல் என்பது, சைக்காலஜிஸ்ட், சைக்யாட்ரிஸ்ட் இருவருக்கும் நடுவில் இருக்கும் இணைப்பு புள்ளி மாதிரி.
எங்களிடம் வருகிற ஒருவரின் மன ரீதியான பிரச்னையை பேசி தீர்ப்பதைத் தாண்டி, ஆழமான நீண்டகால தெரபி தேவைப்படுகிற அளவுக்கு அவர் சீரியஸான சிக்கல்களோடு இருப்பதாக நாங்கள் உணர்ந்தால், அவரை உடனே தகுதியான சைக்காலஜிஸ்ட் அல்லது சைக்யாட்ரிஸ்ட் இருக்கும் முகவரி கொடுத்து அனுப்பி வைப்போம்’’ என்றவாறு இருவருமாய் விடைபெற்றனர்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
