×

பூந்தமல்லி – போரூர் இடையே 6 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில் சேவை: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் முக்கிய இடங்களில் மக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவைக்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக, சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்த பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக, பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடமான 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. பூந்தமல்லி-போரூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கு விரைவில் சேவை தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த வழித்தடத்தில் ஆறு நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது:
பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ பணிகள் என்பது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே ஓட்டுநர் இல்லாத சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். மூன்று பெட்டிகளுடன் 9 கி.மீட்டர் வரையிலான வழித்தடத்தில் அடுத்த மாதம் இறுதியில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாமல் ரயிலை இயக்க முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால் தொடக்க கட்டத்தில் ஓட்டுநர்களின் உதவியுடன் ரயிலை இயக்க முடிவு செய்துள்ளோம். இவை படிப்படியாக குறைத்து எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் இல்லாமல் இயக்குவதற்கு சேவையை மாற்ற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Poonamallee ,Porur ,Chennai ,Central Railway Station ,Koyambedu ,
× RELATED சென்னை கிண்டியில் இன்று தமிழ்நாடு பாஜக உயர்மட்ட குழு ஆலோசனை.!