தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது: மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றும் வழக்கம் கிடையாது

* எங்களிடத்தின் வழியாக செல்ல உடன்பாடு இல்லை
* திருப்பரங்குன்றம் வழக்கில் வக்பு வாரியம் பரபரப்பு வாதம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது. மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றும் வழக்கம் கிடையாது. தர்கா வழியாக சென்று தீபம் ஏற்ற எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று வக்பு வாரியம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் பரபரப்பு வாதம் வைக்கப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே தீபம் ஏற்ற வேண்டுமென்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை எதிர்த்து மதுரை கலெக்டர் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வக்பு வாரியம் தரப்பில் வழக்கறிஞர் முபின் ஆஜராகி, ‘‘மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா அமைந்துள்ளது. அதன் அருகில் தொழுகை நடந்து வருகிறது. அதுவும் அங்கு ஒரு வழக்கமாகவே உள்ளது. தர்கா அதை சுற்றியுள்ள அடக்க ஸ்தலங்கள், நெல்லித்தோப்பு பகுதி போன்றவை இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது. மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றுவது ஒரு வழக்கமாக திருப்பரங்குன்றத்தில் இருந்தது இல்லை. நெல்லித்தோப்பு மற்றும் அது சார்ந்த பாதைகள், அவ்விடத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் உள்ளிட்டவை தர்கா நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையெல்லாம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை. 1862ம் ஆண்டு இதுபோன்ற பிரச்னை எழுந்தது. அப்போது, மலை உச்சியில் உள்ள நெல்லித்தோப்பு தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என உத்தரவானது. மனுதாரர் தரப்பு கூறும் தூண் தர்காவுக்கான இடத்தில் தான் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள ஒரே பாறையில் தான் தர்கா, குதிரை சுனை ஆகியவை அமைந்துள்ளது. அதை ஒட்டி தூண் உள்ளது. மலை உச்சியில் உள்ள தர்கா இருக்கும் பகுதி சிக்கந்தர் மலை என்று தான் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘தர்கா முழுவதும் சர்வே செய்யப்பட்டுள்ளதா’’ என்றனர். இதற்கு, வக்பு வாரியம் தரப்பில் ‘‘சர்வே செய்யப்பட்டுள்ளது’’ எனக் கூறியதும், அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ‘‘தர்காவிற்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளதா? உறுதியான ஆவணங்கள் கொடுக்க இயலுமா?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வக்பு வாரியம் தரப்பு, ‘‘இன்று (டிச.17) அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்கிறோம். நெல்லித்தோப்பு வழியாக தூணிற்கு செல்ல வேண்டுமென்றால் எங்கள் உரிமை பாதிக்கப்படும். இதில் வக்பு நிர்வாகத்திற்கு உடன்பாடு இல்லை. தூணிற்கு செல்ல நெல்லித்தோப்பு வழி பயன்படுத்தப்படுவது இஸ்லாமியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். திருப்பரங்குன்றம் மலை மத நல்லிணக்க மலையாக உள்ளது. இதை சிதைத்து விடக்கூடாது’’ என வாதிடப்பட்டது.

போலீஸ் கமிஷனர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் காணொலி மூலம் ஆஜராகி, ‘‘திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முறை மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்து பிரச்னைகள் எழுந்துள்ளது. கடந்த 1862 மற்றும் 1960ல் தீபம் ஏற்றும் முயற்சியால் பிரச்னை நடந்துள்ளது. அப்போது அதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் திருப்பரங்குன்றத்தில் பிரச்னைகள் ஏற்படுவதை காவல்துறை அனுமதிக்க முடியாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் என்பது தனி நீதிபதியின் கற்பனை.

உறுதியாக தெரியாத நிலையில் அதை தீபத்தூண் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோயில் நிர்வாகம் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், உரிமைகளுக்காக செயல்படும் நிலையில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை கடமைப்பட்டுள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்காத சூழலில் யாருடைய உரிமையையும் மறுக்கவில்லை. பிரச்னையான இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பது சரியானது அல்ல. ஒருபுறம் தர்கா உள்ளது. மற்றொருபுறம் மனுதாரர் குறிப்பிடும் தூண் உள்ளது. இது, நெல்லித்தோப்பு தர்காவிற்கு சொந்தமானது என நீதிமன்ற உத்தரவுகள் உள்ளது.

தர்காவிற்கு சொந்தமான படிப்பாதையில் சென்று தான் அந்த தூணில் தீபம் ஏற்ற முடியும். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும். தனி நீதிபதிக்கு மதம் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை. திருப்பரங்குன்றத்தில் காவல்துறை நடவடிக்கையால் தான் அமைதி ஏற்பட்டது. காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளை உடனுக்குடன் ஆஜராக தனி நீதிபதி உத்தரவிட்டார். அது சரியானது தானா? காவல்துறைக்கு பொதுமக்கள் நலனும் முக்கியம். பக்தர்கள் பாதுகாப்பும் முக்கியம்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகளை யார்? யார்? பயன்படுத்துகிறார்கள்’’ என்றனர்.

இதற்கு காவல்துறை தரப்பில், ‘‘அந்த பாதையை முழுமையாக தற்போது இஸ்லாமியர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்’’ என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அரச பாண்டியன் ஆஜராகி, ‘‘பக்தர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தேவஸ்தானத்திற்கும், கோயில் நிர்வாகத்திற்கும் பொறுப்பு உள்ளது. இதில் நிரந்தர தீர்வு ஒன்றே வழி’’ என்றார். அப்போது அரசு தரப்பில், ‘‘கார்த்திகை தீபம் முடிந்து விட்டது. தற்போது மார்கழி மாதம் தொடங்கி விட்டது. இதை நாம் அவசரமாக விசாரிக்க வேண்டியது இல்லை’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தர்கா மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு இடையே ஏன் சமரசம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கக் கூடாது? அதற்கு உத்தரவிடலாமா?. தற்போது உள்ள சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கு விசாரணை இன்றும் தொடரும் எனக் கூறி தள்ளி வைத்தனர்.

* திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
* லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் திருப்பரங்குன்றத்தில் பிரச்னைகள் ஏற்படுவதை காவல்துறை அனுமதிக்க முடியாது.
* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் என்பது தனி நீதிபதியின் கற்பனை.
* ஒருபுறம் தர்கா உள்ளது. மற்றொருபுறம் மனுதாரர் குறிப்பிடும் தூண் உள்ளது. இது, நெல்லித்தோப்பு தர்காவிற்கு சொந்தமானது என நீதிமன்ற உத்தரவுகள் உள்ளது.
* தர்காவிற்கு சொந்தமான படிப்பாதையில் சென்று தான் அந்த தூணில் தீபம் ஏற்ற முடியும். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.
* தனி நீதிபதிக்கு மதம் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை.

* ‘தனி நீதிபதி வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது’
காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதடும்போது, ‘வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்காக அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர். இது பாழ்படக் கூடாது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழும் மத நல்லிணக்க மாநிலமாக உள்ளது. இரு மதத்தினருக்கு இடையே, இரு பிரிவினருக்கு இடையே நல்லுறவு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் காவல்துறை தனது கடமையை செயல்படுத்த வேண்டும். தனி நீதிபதி தான் எடுத்துக் கொண்ட சத்திய பிரமாணத்திற்கு எதிராக செயல்பட்டு உள்ளார். அவர் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது’’ என்று கூறினார்.

* முறையிட்ட வழக்கறிஞர் சிஐஎஸ்எப் படை மூலம் அதிரடியாக வெளியேற்றம்
ஐகோர்ட் மதுரை கிளையில் நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நீதிபதிகள் நேற்று காலை வழக்கம் போல வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது வழக்கறிஞர் அருணாச்சலம், நீதிபதிகள் முன் ஆஜராகி, ‘‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே தீபம் ஏற்ற வேண்டுமென்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனது தரப்பிலான இடையீட்டு மனுவையும் விசாரணைக்கு ஏற்க வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய ஏற்கனவே போதுமான கால அவகாசம் கொடுத்து விட்டோம். எனவே, புதிதாக எந்த இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது’’ என்றனர்.

ஆனால், வழக்கறிஞர் அருணாச்சலம், ‘‘நான் இந்திய குடிமகன். என்னுடைய கருத்துக்களை முன்வைக்க எனக்கு உரிமை உள்ளது’’ என்றார். இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், நீதிமன்ற வளாகத்தின் வெளியே பாதுகாப்பில் நின்றிருந்த சிஐஎஸ்எப் படையினரை அழைத்து உடனடியாக வழக்கறிஞர் அருணாச்சலத்தை நீதிமன்றத்தை விட்டு வெளியேற்றுமாறு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டார். அப்போது நீதிபதிகள், ‘‘திருப்பரங்குன்றம் விவகாரம் மிகவும் முக்கியமான வழக்கு. இதில் புதிதாக இடையீட்டு மனுக்களை ஏற்க முடியாது என்று ஏற்கனவே தெரிவித்தும், ஏன் புதிய மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள். இந்த வக்கீல் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: