செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டி

 

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், “சமூகம் என்பது அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பையும் வழங்கும் ஒரு குடும்பம்” என்று வலியுறுத்திய நிலையில், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் முழுமையாக இணைந்து முன்னேறுவதற்கான சூழலை உருவாக்கும் நோக்குடன், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது.

சமூகத்தில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சம உரிமையுடனும், பாதுகாப்புடனும், மரியாதையுடனும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குவது திராவிட மாடல் அரசின் முக்கிய இலக்காகும். இந்த இலக்கை அடைய, அரசு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளிலும் சிறப்பு நலத்திட்டங்களைக் கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகிறது.

திருநங்கை நல வாரியம் நிறுவுதல், இலவசப் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், உதவித்தொகைத் திட்டங்கள், அடையாள அட்டை வழங்குதல், அரசு வீடுகளில் முன்னுரிமை அளித்தல் போன்ற சலுகைகளை வழங்கி, அரசு அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகிறது. அண்மைக் காலமாக அரசின் மனிதநேயம், சமூக நீதி, சமத்துவம், சமூக இணைப்பு முயற்சிகள் மேலும் வலுப்பெற்று, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளையும் வாழ்வியல் முன்னேற்றத்தையும் பெருமையுடன் வெளிப்படுத்தும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்டி, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் “தமிழ்நாடு உரிமைகள் திட்டம்”. இது, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களுக்காக அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய தேவையைப் போக்கி, அவர்கள் வீட்டிலிருந்தே அனைத்துச் சேவைகளையும் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், செவித்திறன் கருவிகள் (Hearing Aids) உள்ளிட்ட உதவி உபகரணங்கள், மருத்துவ மதிப்பீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், அத்துடன் மனநல ஆலோசனை மற்றும் ஆரம்பத் தலையீடு சேவைகள் போன்ற அனைத்து முக்கிய மறுவாழ்வு உதவிகளையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பின் விளைவாக, மாற்றுத்திறனாளிகள் இனி ஊராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி ஆணையங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் மூலமாகவோ அல்லது நியமனம் மூலமாகவோ நேரடி பிரதிநிதித்துவம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் பொருட்டு, “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அது மட்டுமின்றி தமிழ்நாடு அரசு, பாராஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிப்பதிலும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக, பதக்கம் வென்ற வீரர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும். சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் தமிழ்நாடு பாராஒலிம்பிக் வீரர்களுக்கு மற்ற மாநிலங்களுக்கு நிகராக, அல்லது அதிகமாக, தமிழ்நாடு அரசு பெருமளவிலான பணப் பரிசுகளை வழங்குகிறது. இது வீரர்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரமாகும்.

சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட அரசின் தீவிர முயற்சிகளைப் பிரதிபலிக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தவுள்ளது. போட்டிகளும் அதன் விதிமுறைகளும் பின்வருமாறு:

* என் வாழ்வை மாற்றிய அரசுத் திட்டம்

திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் இந்த போட்டிகளின் நோக்கம் என்னவெனில், உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் அரசுத் திட்டம் அல்லது முன்னெடுப்பு குறித்த உங்கள் அனுபவத்தைப் பின்வரும் படைப்பு வடிவங்களில் ஒன்றைத் தேர்வு செய்து அதன் மூலம் வெளிப்படுத்தலாம். கட்டுரைப் போட்டி – அதிகபட்சம் 2 பக்கங்கள் (word/pdf)
ரீல்ஸ் போட்டி – 60 – 90 வினாடிகளில்

* திறமை தேடல் போட்டி

திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ/ரீல்ஸ் பதிவு செய்து அனுப்பவும்; சமூகத்திற்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ/ரீல்ஸ் பதிவு செய்து அனுப்பவும். வினாடி வினா போட்டி; திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த வினாடி வினா போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணைந்து உயர்வோம் (Let’s Rise Together) மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது உங்கள் பகுதியில் உள்ள அரசு, தனியார் மாற்றுத்திறனாளிகள் பள்ளிகள் குறித்த தகவலை ரீல்ஸ் வடிவில் எடுத்து அதனை TNDIPR சமூக வலைதளங்களை Tag செய்து #LeaveNoOneBehind என்ற hashtag-ஐ பயன்படுத்தி உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரவும்.

போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் படைப்புகளை இம்மாத இறுதிக்குள், மின்னஞ்சல்/QR Code/ Whatsapp பயன்படுத்தி அனுப்பி வைக்க வேண்டும்.

1. மின்னஞ்சல்: tndiprmhdec@gmail.com
2. விரைவுத் துலங்கல் குறியீடு (QR Code):
3. வாட்ஸ்அப் எண் (Whatsapp No): ஊடக மையத்தின் வாட்ஸ்அப் எண் 9498042408-க்கு ஒரு ‘ஹாய்’ (Hi) அனுப்பி லிங்கைப் பெறுங்கள்

Related Stories: