*பயணிகள் அவதி
மார்த்தாண்டம் : நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அழகியமண்டபம் சந்திப்பானது காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், மருத்துவமனை, தேவாலயம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
அழகியமண்டபம் சந்திப்பில் இருந்து திருவனந்தபுரம், நாகர்கோவில், குளச்சல், திங்கள்நகர், திருவட்டார், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சந்திப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் இருந்தது.
இந்த நிலையில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டது. அன்றில் இருந்து தற்போது வரை மாற்று நிழற்குடை ஏற்படுத்தவில்லை. இதனால் அழகியமண்டபம் சந்திப்பில் பஸ்சுக்காக வரும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.தற்போது மற்றொரு பிரச்னையாக சந்திப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலை வழியாக பாய்ந்தோடுகிறது.
இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை வர்த்தகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காட்டாத்துறை ஊராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
துர்நாற்றம் வீசுவதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், வியாபாரிகள் ஆட்டோ டிரைவர்கள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே அழகியமண்டபம் சந்திப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வியாபாரிகள், டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
