வெம்பக்கோட்டை அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்

*நோய்த்தொற்று பரவும் அபாயம்

ஏழாயிரம்பண்ணை : வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் சாலையோராங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதால், அவற்றை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

தாயில்பட்டி மெயின் பஜார் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்டவைகளில் சேரும் குப்பைகளை, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகே சாலையின் ஓரத்தில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டப்படுகிறது.

இந்நிலையில் இந்த சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மாமிசக் கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தாத காரணத்தினால் குப்பையானது சாலை முழுவதும் கொட்டப்படுகின்றன.

அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் திண்பதோடு அதனை சாலையின் நடுவே கொண்டு சென்று போட்டு விடுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த குப்பை தொட்டியானது தாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் அருகே இருப்பதால் பள்ளிக்குள் துர்நாற்றம் விசுவதோடு மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து வெம்பக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளை சிலர் தீ வைப்பதால் அப்பகுதியில் புகை மண்டலம் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் சேரும் குப்பைகளை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: