மாதங்கள் பல இருந்தும், மார்கழி மாதத்திற்கென்றே பல தெய்வீகப் பெருமைகள் உண்டு!
அதிகாலையிலேயே கண்விழித்து, எழுந்திருந்து பகவானை நெஞ்சில் வைத்து, அவன் பெருமைகளைப் பாடியாடி உள்ளம் உகுக்கும் மாதமிது!!
இன்னமும் உறக்கத்திலேயே ஆழ்ந்திருப்போரையும் தட்டிெயழுப்பும் தெய்வீக மாதம் இந்த மார்கழி!
பகவான் கண்ணன் மீது அளவற்ற பக்திபூண்ட ஆண்டாள், தனது தோழிகளுடன் விரதமிருந்து, திருவரங்கத்து இன்னமுதன் ஸ்ரீரங்கநாதனை அடைந்த புண்ணிய மாதம் மார்கழி!!
அக்கினிக்கு மத்தியில், ஒற்றைக் காலுடன் நின்று கடுந்தவம் இயற்றியும் அைடயமுடியாத பகவானைத் தூய பக்தி ஒன்றினாலேயே அடைந்துவிட முடியும் என்று ஸ்ரீ ஆண்டாள் நிரூபித்துக்காட்டிய புனித மாதம் இந்த மார்கழி!
உறக்கத்திலாழ்ந்துள்ள அனைவரையும், விடியற்காலையிலேயே எழுப்பிடச் செய்யும் வீதியெங்கும் ஒலிக்கும் பஜனைகளும், “கோவிந்தா, கோவிந்தா…!” எனும் திவ்ய நாம கோஷங்களும், திருப்பாவை – திருவெம்பாவை தெய்வீகப் பாடல்களும், மார்கழி மாதத்தின் தெய்வீகப் பெருமையைப் பறைசாற்றுகின்றன.
மார்கழி மாதம் தேவர்களின் உலகமான சுவர்க்கத்தின் அதிகாலைப் பொழுதாகும். அப்போது, மகரிஷிகளும், மாமுனிவர்களும், பித்ருக்களும், தேவர்களும், கந்தவர்களும் தேவ கங்கையில் நீராடி, சூரிய பகவானுக்கு அந்த கங்கா தீர்த்தத்தினால் அர்க்கியம் விடும் நேரமும் இந்த மாதத்தில்தான்!
ஆதலால்தான், பூவுலக மக்களும், இப்புனித அதிகாலை நேரத்தில், பகவானைக் குறித்து பஜனைகள் பாடுவதும், அவரைப் பூஜிப்பதும் அளவற்ற புண்ணிய பலனை அளிக்கவல்லவை.
மாமுனிவர்கள், சூரியனை வணங்கி, கங்கா தீர்த்தத்தினால் அர்க்கியம் கொடுக்கும்போது, “அனைத்து உலகத்தினரும் க்ஷேமமாக இருக்கட்டும்…!” என்று கூறி, கங்கா ஜலத்தினால் அர்க்கியம் விடுகிறார்கள். அப்போது மகரிஷிகள் “ததாஸ்தூ….!” அதாவது அவ்விதமே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கின்றனர். ஆதலால்தான், மார்கழி மாதம் அதிகாலையில் பகவானையும், இந்திராதி தேவர்களையும், புண்ணிய நதிகளையும், திவ்ய திருத்தலங்களையும் பூஜிப்பது நாம் அறிந்தோ, அறியாமலோ செய்துள்ள அனைத்து பாவங்களிலிருந்தும் நம்மை விடுவித்துவிடுகின்றன,
இறைவன் மட்டுமின்றி, பித்ருக்களும் (மறைந்த நம் முன்னோர்கள்) மார்கழி மாதம் விடியற்காலையில் நாம் பூஜிப்பதன் மூலம், பூரண திருப்தியை அடைந்து, நம்மை ஆசீர்வதிக்கின்றனர். இதனை கருட புராணம் போன்ற புராதன நூல்களும், எடுத்து உரைக்கின்றன.
சுருக்கமாகக் கூறவேண்டுமாகில், மார்கழி மாதம் நாம் தேடிச் செல்லவேண்டிய புண்ணியம், நம்மைத் தேடி வருகிறது என்பதே உண்மையாகும்.
இதன் காரணத்தினால்தான், மற்ற மாதங்களைவிட, மார்கழி மாதம் உயர்ந்தது. அதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவானும் , “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிேறன்…!” என குருக்ஷேத்திரப்புண்ணியப் பூமியில் அருளியுள்ளார். பரம பக்தையான ஆண்டாளும், தனது திருப்பாவையில், “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்…” என அருளியுள்ளார்.
ஆதலால், மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையிலேயே எழுந்திருந்து, நீராடி, பகவானைப் பூஜிப்பது அனைத்து பாவங்களையும் போக்கி, மகத்தான புண்ணிய பலன்களை அளிக்கவல்லது.
மார்கழி பாவை நோன்பிருந்து, ஆண்டாள், அரங்கனையே தன் பதியாக அடைந்தாள் என்பதைவிட, திருப்பாவையின் பெருமைக்கும், சக்திக்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்….?
ஆதலால்தான், நமது முன்னோர்கள் காலங்காலமாக, மார்கழி மாதத்தில், அதிகாலையிலேயே எழுந்திருந்து, நீராடி, திருப்பாவை – திருவெம்பாவை முதலிய பாசுரங்களைச் சொல்லி பகவானைப் பூஜித்து, அவரின் தெய்வீகப் பெருமைகளைப் பாடி யாடி, மகிழ்ந்து உய்வுற்றனர்.
ஆதலால், பகவானைப் பூஜிப்பதற்கும், அவரது திருவருளை எளிதில் பெறுவதற்கும், மார்கழி மாதத்தைவிட, எளிய வழி வேறில்லை என்ற காரணத்தினால் பகவானே குருக்ஷேத்திரப் புண்ணியப் பூமியில், “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன்…!” என தனது அமுத வாக்கினால், கூறி அருளினான்.
ஆண்டாளும், தனது திருப்பாவை மூலம், மார்கழி மாதத்தின் தெய்வீகச் சிறப்பினை உணர்த்தியருளினாள். இத்தகைய தெய்வீக சக்தியையும் பெருமையையும் கொண்டு திகழும் இந்த மார்கழி மாதம் நமக்கு எத்தகைய நன்மைகளை அளிக்கவுள்ளது என்பதை ஜோதிடக் கலையின் மூலம் நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போமா….? முதற்கண் இம்மாதத்தின் முக்கிய நிகழ்வுகளைக் காண்போம்
மார்கழி 1 (16-12-2025) – செவ்வாய்க்கிழமை : தனுர் மாதப் பிறப்பு (மார்கழி மாதப் பூஜை ஆரம்பம்). ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அவதரித்த ஸ்வாதி நட்சத்திரம். தன் பக்த பிரஹ்லாதன் மற்றும் அடியார்களைக் காத்தருள் புரிய தூணிலிருந்து வெளிப்பட்டு, ஹிரண்யனை வதம் செய்தார் இந்நன்னாளில், ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக் கோயிலுக்குச் சென்று, ஒன்பது மண் அகல் விளக்குகளில் பசு நெய் தீபம் ஏற்றி வழிபட சகலவித உங்களுடைய அனைத்துவித அபிலாஷைகளும் நிறைவேறிடும் எனச் சொல்லவும் வேண்டுமோ?
மார்கழி 2 (17-12-2025) – புதன்கிழமை: இன்றைய தினம் கிருஷ்ணபட்ச பிரதோஷ தினம். இவ்விரதத்தைப் பற்றி அநேக புராணங்களில் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது. இவ்விரதம் புதன்கிழமையில் நிகழ்வதால், குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் எவ்விதத் தடங்கலும் உண்டாகாது. மேற்படிப்பிற்காக மேற்கொள்ளப்படும் பூர்வாங்க நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றிக்கனியை உங்கள் கைமேல் கொணர்ந்து கொடுக்கும்.
மார்கழி 3 (18-12-2025) – வியாழக்கிழமை: மத்வாச்சாரியார் புண்ய தீர்த்தர் ஸ்ரீ வித்யாதீசர் புண்ணிய தினம்
மார்கழி 4 (19-12-2025) – வெள்ளிக்கிழமை: சர்வ அமாவாசை பித்ருக்களைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம். ஸ்ரீஹனுமத் ஜெயந்தி. பரம ஸ்ரீராம பக்தரான ஹனுமானின் அவதார தினம்.
காளீ தாரா மஹா வித்யா ஷோடஸீ புவனேஸ்வரி
பைரவீ சின்ன மஸ்தாச வித்யா தூமாவதீ ததா
மாதங்கீ ஸித்த வித்யாச கமலா பகளாமுகீ
ஏதாதஸ மஹாவித்யா: ஸர்வ தந்த்ரேஷு கோபிதா: தஸ மஹா வித்யா நாம மந்திரத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், ஸ்ரீ மகா விஷ்ணுவின் தசாவதாரத்தின் ஸ்ரீ பரசுராமருக்குஇைணயான பராக்கிரமம் உைடயதும் ஆதிபராசக்தியின் தச (பத்து) வடிவமானதும், ஒருவரின் ஜனன ஜாதகத்தில், லக்னம் மற்றும் மாத்ருகாரர் என்றுபோற்றிப் புகழப்படும் சூரியனின் மற்றும் சுக்கிரனின் தோஷங்களை அடியோடு விலக்கிவிடுபவளாக போற்றிக் கொண்டாடப்படுபவளுமாகிய அம்பாளின் கமலா ஜெயந்தி. இன்றைய தினத்தில் அம்பாளை கலசத்தில் எழுந்தருளச் செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு கண்ணாடி வளையல்கள், ரவிக்கைத் துண்டு, வெற்றிலை – பாக்கு தாம்பூலம் கொடுத்து வணங்க, அனைத்துவித நலன்களும் உங்களை வந்தடையும்.
மேலும், இன்று ஸ்ரீதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருநட்சத்திரம். அழகிய மணவாளப் பெருமாள் நயினார், பெரிய நம்பிகள், நல்லூர் ஆச்சாம்பிள்ளை அவதாரத் திருநட்சத்திரங்கள்.
மார்கழி 6 (21-12-2025) – ஞாயிற்றுக்கிழமை: தேய்பிறை முடிந்து, வளர்பிறை ஆரம்பிக்கும் முதல் நாளாகிய இந்நாளில் சந்திரனை, மேற்குக் கீழ்வானில் கண்டு, தரிசிப்போருக்கு இந்நாள் தொடங்கி இம்மாதம் முடியுறும்காலம் வரை வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும், ஆயிரம் பிறைகாணும் நற்பேறைப் பெற்று வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் என்பது நவக்கிரக புராணத்தில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது . நமக்கு தேவை நம்பிக்கையுடன் கூடிய பக்தி மட்டு மே! இன்றைய தினம் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தினம்.
மார்கழி 13 (28-12-2025) – ஞாயிற்றுக்கிழமை: மாத சிவராத்திரி. இவ்விரதம் மிகவும் உயர்ந்த உத்தமமான விரதம். பகல் முழுவதும் உபவாசமிருந்து, மாலை நேரத்தில் இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்து, அவரவர்களுக்குரிய திலகம் (விபூதி) தரித்துக் கொண்டு, ருத்ராட்ச மாலை அணிந்துகொண்டு, பல்வேறு திரவியங்களைக் கொண்டு – தேன், பால், தயிர், கரும்புப் பால், வாழைப் பழம், பலாப்பழம், மாம்பழம் – பஞ்சாமிருதம், குங்குமப்பூ, பசுஞ்சாணியில் தயாரிக்கப்பட்ட விபூதி இவற்றால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வித்தல் வேண்டும். இயலாதவர்கள் மேலே குறிப்பிட்ட திரவியங்கள் எவையெவை கிடைக்கின்றதோ அவற்றைத் திருக்கோயில் அபிஷேகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் மேலும், இன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான வில்வ தளத்தினால் அர்ச்சிப்பது விசேஷ பலன்களைத் தரவல்லது. சிவ பூஜை செய்ய வசதி வாய்ப்புகள் இல்லாத பக்தர்கள், இன்றிரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்தாலே மகத்தான புண்ணிய பலன்களை அடையப் பெறுவீர்கள் என்பதாக ஸ்ரீ ஸ்காந்த புராணத்தில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஆகவே, பக்த கோடிகள் இவ்விரதத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கின்றோம். இன்று வாயிலா நாயனார் முக்தியடைந்த தினம்.
மார்கழி 15 (30-12-2025) – செவ்வாய்க்கிழமை: சர்வ முக்கோடி ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி. தாயிற் சிறந்த கோயில் இல்லை. கங்கையை விடப் புண்ணிய நதி இல்லை. காயத்ரி மகா மந்திரத்தை விட சக்தி வாய்ந்த மந்திரங்கள் உலகில் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு! ஏகாதசிக்கு சமமான விரதநாள் ஏதுமில்லை! ஏகாதசிக்கு முதல்நாள், தசமியன்று காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு, காலை சிற்றுண்டி, மதிய போஜனம் செய்த பிறகு இவ்விரதம் ஆரம்பமாகின்றது! இன்று தொடங்கி, மறுதினம் ஏகாதசியன்று நிர்ஜலமாக (தண்ணீரைக்கூடப் பருகிடாமல் இருத்தல்) இருப்பது மிக நன்று. இன்று இரவு நேரத்தில் கண்விழித்து, இறைவனின் நாமத்தை – கதைகளையும் பக்தி – சிரத்தையுடன் சொல்லியும் கேட்டுக் கொண்டும் இருக்க வேண்டும். மறு நாள் காலையில், சூரிய உதயத்தின்போது – துவாதசியன்று, அகத்திக் கீரை, நெல்லிக்காய் சேர்த்து இறைவனுக்குப் படைத்த பிறகு, குடும்பத்துடன் கூடியிருந்து குளிர்ந்து பிரசாதமாக உட்கொள்ளல் வேண்டும்.
இவ்விரதத்தைக் கைகொள்பவர்களுக்கு, முற்பிறவியில் செய்த பாபங்கள் அனைத்தும் தீயினிற் தூசாகிடச் செய்யும். இந்தப் பிறவியில் நமக்கு தேவையான இக பர சுகங்களனைத்தையும் ஒரு தாயானவள், தன் குழந்தைக்கு என்ன தேவை? எப்போது தேவை? எவ்வளவு தேவை? என்பதை நன்குணர்ந்தவள் போல், இறைவனும் நமக்குத் தேவையான அனைத்து செல்வ வளங்களையும் தந்து ஸ்ரீவைகுண்டப் பதவியையும் அளித்து, பிறவிப் பெருங்கடலை, ஒரு பசுமாட்டின் காலடியைக் குளம்படியைக் கடப்பதுபோல் கடக்கச் செய்துவிடுவதாக அனைத்து புராண இதிகாசங்களும் (இந்த விரதத்தைக் கூறாத புராணங்கள் இல்லை எனலாம்) கூறியுள்ளன.
மார்கழி 17 (1-1-2026) – வியாழக்கிழமை: சுக்லபட்ச பிரதோஷம். இந்நாளில் விரதமிருந்து, பிரதோஷ காலமாகிய மாலை (4.30-லிருந்து 6.30வரை) சாம்ப சிவ மூர்த்தியை ரிஷபாரூடராக தரிசனம் செய்தால், அனைத்துவித பாபங்களிலிருந்து விடுபடலாம். உங்கள் வீட்டில் மன நிறைவுடன் கூடிய மகிழ்ச்சியும், உங்கள் இல்லத்தில் நிறைந்திருக்கும்.
மார்கழி 18 (2-1-2026) – வெள்ளிக்கிழமை: ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு உகந்த வளர்பிறை சதுர்த்தசி – ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அவதரித்த திதி. தன் பக்த பிரஹ்லாதன் மற்றும் அடியார்களைக் காத்தருள் புரிய வளர்பிறை சதுர்த்தசி திதியில் பிரதோஷ காலத்தில் தூணிலிருந்து வெளிப்பட்டு, ஹிரண்யனை வதம் செய்தார் இந்நன்னாளில், மாக்கோலமிட்டு, லட்சுமி நரசிம்மரின் உருவப் படத்தை எழுந்தருளச் செய்து, துளசி தளத்தினால் அர்ச்சித்து, வெல்லம், சுக்கு, ஏலக்காய் கலந்த பானகம் அமுது செய்வித்து, அருகே உள்ள திருக்கோயிலுக்குச் சென்று அமுது செய்த பானகத்தை விநியோகம் செய்தால், எதிரிகளற்ற – நல்வாழ்வைத் தந்தருள்வார், ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி.
மேலும், இன்று பெளர்ணமி விரதம் மனோகாரகரான சந்திரன் பௌர்ணமி காலங்களில், மனித மனங்களை அதிகமாக நிதானமில்லாத வேகம் கொள்ளச் செய்வதனாலும், இதன் காரணமாகவே மனத்தளவில் பலஹீனமானவர்கள் சற்றும் விவேகமில்லாத செயல்களைச் செய்கின்றனர். மாத்ருகாரகரான சந்திரனின் அதி தேவதை நீர்! அதனால்தான், இக்காலங்களில் கடல் அலைகள் மேலெழுந்து, சுனாமி போன்ற இடர்பாடுகளை உண்டாக்குகின்றன.
இந்நன்னாளன்று, உபவாசமிருந்து (உணவேதும் உட்கொள்ளாமல், உப + சமீபவாசம் = உடலாலும், மனத்தளவிலும் இறைவனின் திருவுருவிற்கருகாமையில் வீற்றிருத்தல், இறைவனின் திருப் பெயர்களை வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்திருத்தல்), மாலையில் முழுநிலவை தரிசித்த பிறகு, ஸ்ரீ சத்திய நாராயண பூஜை செய்து, இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால், நமது உள்ளக் கிலேசங்கள் அனைத்தும் நீங்கி, சகல சம்பத்துக்களையும் தந்தருள்வேன் என சத்திப் பிரமாணம் செய்துள்ளதாலேயே இவ்விரதத்திற்கு சத்திய நாராயண விரதம் என்ற காரணப் பெயர் உண்டாயிற்று. மேலும், இன்று மதுரை ஸ்ரீ மந் நடன கோபால நாயகி ஸ்வாமிகளின் திருநட்சத்திரம். மேலும், இன்றைய தினத்தில் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு உகந்த திருவாதிரை அபிஷேக தினம். பக்த கோடிகள் கோயிலுக்குச் சென்று, அபிஷேகத்திற்குகந்த, தேன், பால், தயிர், கரும்புச் சாறு, பஞ்சாமிருத அபிஷேகத்திற்கான பழ வகையறாக்களைக் கொடுத்து, மகத்தான புண்ணிய பலன்களைப் பெற முடியும்.
மார்கழி 19 (3-1-2026) – சனிக்கிழமை: ஆருத்ரா தரிசனம். சடைய நாயனார் முக்தி பெற்ற நாள்.
மார்கழி 20 (4-1-2026) -ஞாயிற்றுக்கிழமை: ஸ்ரீரமண பகவான் அவதார தினம். ஸ்ரீ மத்வ ஸ்ரீ ராகுநாத தீர்த்தர் புண்ணிய தீர்த்த தினம்.
மார்கழி 22 (6-1-2026) – செவ்வாய்க்கிழமை: சித்த வைத்தியத்திற்கு அளப்பரிய பணிகள் ஆற்றிய அகத்திய சித்தர் திருவவதாரப் புண்ணிய தினம்.
“மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா!!
மனமது செம்மையானால், வாயுவை யுயர்த்த வேண்டா!!
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா!!
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே!!”
அகத்திய மாமுனி இன்றைய தினத்தில் உங்கள் வீட்டில் மாக் கோலமிட்டு, அகத்திய சித்தரின் உருவப் படத்தை எழுந்தருளச் செய்து, மேற்கூறிய பாடலை ஒன்பது முறை சொல்லி, 18 முறை வலம் வந்து வணங்கினால், உங்கள் சந்ததியர் யாரும் அகாலத்தில் மரணமடையார். அங்கஹீனக் குழந்தைகள் பிறக்காது. அறிவிற் சிறந்த – அன்பிலும் பண்பிலும் உயர்ந்த குழந்தைச் செல்வங்களைப் பெற்று வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் வளமுடனும், உடல் நலமுடனும்!
மார்கழி 23 (7-1-2026) – புதன்கிழமை: திருவையாறு ஸ்ரீ தியாக பிரம்மம் ஆராதனை.
மார்கழி 25 (9-1-2026) – வெள்ளிகிழமை: இயற்கை நாயனார் முக்தி பெற்ற திருநாள்.
மார்கழி 26 (10-1-2026) – சனிக்கிழமை: தேவதேவாஷ்டமி கால பைரவருக்கும் சிவபெருமானுக்கும் உகந்த இந்த அஷ்டமி நன்னாள் காலையில் சிவபெருமானையும், சூரிய அஸ்தமன வேளையாகிய மாலை நேரத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால், உங்கள் மனத்திலுண்டாகும் அனாவசியமான கற்பனையான மனப்பிராந்தி பயம் விலகிடும். உங்கள் உத்தியோகத்தில் ஊதிய உயர்வு அல்லது பதவியுயர்வு கிடைக்கும்.
“விடங்கொண்ட மீனைப் போலும்,
வெந்தழல் மெழுகு போலும்,
மடங்கொண்ட பாந்தள் வாயில்
பற்றிய தேரைப் போலும்,
திடங்கொண்ட ராம பாணம்
செருக்களத் துற்ற போது,
கடன்கொண்ட நெஞ்சம்போலும்
கலங்கினான் இலங்கை வேந்தன்!”
– அருணாசலக் கவிராயர்
இன்று இவ்விரதமிருப்பதால், குடும்பத்தில் வறுமை நீங்கும் கடன் கொண்ட நெஞ்சம் போலும், அஞ்சி நடுங்கி, ஓடிஒளிந்து மறையவோ கலங்கவோ வேண்டாம், காரணம், கடன் தொல்லைகள் அனைத்தும்அகலும்! இதை அனுபவத்தில் கண்டு மகிழலாம்.
மார்கழி 28 (12-1-2026) – திங்கட்கிழமை: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி அவதரித்ததும் வாயு பகவானின் அபிமான நட்சத்திரமாகிய ஸ்வாதி நட்சத்திரம். உங்கள் வீட்டுப் பூைஜயறையில் மூன்று அகல் விளக்குகளில் நெய் தீபமேற்றி வைத்து,
ஓம் உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வேதா முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
எனும் சக்திவாய்ந்த மகா மந்திரத்தை 18 முறை அல்லது 108 முறைகள் ஜபிப்பீர்களேயானால், உங்கள் ஜனன ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள செவ்வாய் தோஷம் விலகிடும். அகால மரணம் எய்திடாது அனைவரும் சதாபிஷேகம் கண்டு, ஆயுள், ஆரோக்கியத்துடனும், சகல துறைகளிலும் அதீதமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மேலும், இன்று மானக்கஞ்சார நாயனார் முக்தி பெற்ற நன்னாள்.
மார்கழி 30 (14-1-2026) – புதன்கிழமை போகிப் பண்டிகை.
