சிட்னி: ஆஸ்திரேலியா போன்டி கடற்கரையில் யூதர்கள் மத நிகழ்ச்சியின் போது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவனை போலீசார் சுட்டு கொன்றனர். இன்னொருவன் கைது செய்யப்பட்டுள்ளான். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை மிக முக்கிய சுற்றுலாத்தலமாகும். ஹனுக்கா என்ற யூத திருவிழாவையொட்டி போன்டி கடற்கரைக்கு நேற்று நூற்றுக்கணக்கான யூதர்கள் வந்திருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென கடற்கரையில் நின்றிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதனால் பீதியடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்குமிங்கும் ஓடினர்.
இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 2 போலீசார் உட்பட 29 பேர் படுகாயமடைந்தனர். அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். இன்னொருவரை பொதுமக்களில் ஒருவர் தாக்கி கீழே தள்ளி துப்பாக்கியை பறித்தார். பின்னர் அந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ‘’சுமார் 10 நிமிடங்களாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. அது சாதாரண துப்பாக்கியின் சத்தம் அல்ல, ஒரு சக்திவாய்ந்த ஆயுதத்தின் சத்தம் போல இருந்தது. துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு இறந்த நிலையிலும், காயமடைந்த நிலையிலும் கிடந்தவர்களை நாங்கள் பார்த்தோம் ‘’ என்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வந்த காரில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போன்டி கடற்கரை தாக்குதலை தீவிரவாத சம்பவம் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. போன்டி கடற்படை தாக்குதலில் 11 பேர் பலியானதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆஸி.மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஆஸ்திரேலிய அரசு யூத எதிர்ப்பு பிரசாரத்தை தூண்டிவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டினார். கடந்த ஆகஸ்ட் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் யூதர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என இஸ்ரேல் பிரதமர் குற்றம் சாட்டினார். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
