புதுடெல்லி: நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை மற்றும் துயரங்களைப்போக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் அடிப்படையில், 2017ம் ஆண்டில் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய தேசியப் பிரச்னையாக விரிவுபடுத்தப்பட்டு, தேசிய அளவிலான செயல்திட்டத்தை உருவாக்கக் கோரப்பட்டது.
தற்கொலைக்குப் பின் இழப்பீடு வழங்குவதை விட, அதைத் தடுக்கும் தேசியக் கொள்கையே அவசியம் என நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கிடையே, நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு கடந்த 2024ம் ஆண்டு தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘விவசாயிகளின் நலனுக்காகவும், கடன் சுமை மற்றும் பயிர் இழப்பு போன்ற துயரங்களுக்கான அடிப்படைப் காரணங்களைத் தீர்க்கவும் ஒன்றிய, மாநில அரசுகள் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன?’ என்பது குறித்து விரிவான விவரங்களைக் கோரினர். மேலும், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரர் தரப்பில் கூடுதல் தரவுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்து வழக்கை ஒத்திவைத்தது.
