- தமிழ்
- தமிழ்நாடு
- மகாராஷ்டிரா
- குஜராத்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மகாராஷ்டிரா
- ரிசர்வ் வங்கி
சென்னை: மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களைவிட தமிழகம் 16 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் நாட்டின் மிக வேகமாக வளரும் மாநிலமாக இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதைக் குறிப்பிட்டு, பொருளாதார வளர்ச்சியில் பெரு மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆட்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கி காட்டுவேன் என ெபருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியிலும், தனி நபர் வளர்ச்சியிலும் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. தமிழகத்தில் அரசு செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மூலம் தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2024-2025ம் ஆண்டில் இந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலை குறித்த அறிக்கை அடங்கிய புத்தகத்தை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2023-2024ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) ரூ.26.88 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024-2025ம் ஆண்டில் ரூ.31.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2021-2022 நிதியாண்டில் ரூ.20 லட்சத்து 72 ஆயிரம் கோடியாக இருந்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தற்போது ரூ.31.19 கோடியாக அதிகரித்துள்ளதன் மூலம் 15.98 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதே நிதியாண்டில் கர்நாடகாவின் உள்நாட்டு உற்பத்திபொருளாதார வளர்ச்சி 12.77 சதவீதம்தான். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார மாநிலமான மகாராஷ்டிரா இந்த காலக்கட்டத்தில் 11.70 சதவீத வளர்ச்சியைத்தான் பெற முடிந்தது. குஜராத்தின் உள்நாட்டு உற்பத்தி 12.69 சதவீதம்தான். தமிழகத்தின் தனிநபர் வருமானம் கடந்த நிதியாண்டில் ரூ. 3 லட்சத்து 13,329 ஆக இருந்தது.
இது, நடப்பு நிதியாண்டான 2024-2025ல் ரூ.3 லட்சத்து 61,619 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் தனி நபர் வருமானம் ரூ.3.லட்சத்து 80,906 அதே நேரத்தில் தெலங்கானாவின் தனி நபர் வருமானம் ரூ.3 லட்சத்து 87,623 ஆகும். தனி நபர் வருமானத்திலும் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது. இதன் மூலம், மாநில உள்நாட்டு உற்பத்தியிலும், தனி நபர் வருமானத்திலும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளியிருப்பது பொருளாதார நிபுரணர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதெற்கெல்லாம் முக்கிய காரணம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள்தான் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் தெரிவித்துள்ளனர். வானுயர் வளர்ச்சி: இந்நிலையில், பெரு மாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி வானுயரத்தில் தமிழக ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
வானுயர் ஜிஎஸ்டிபி (GSDP) வளர்ச்சி விகிதம், பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை. பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை. இருந்தும் ஜிஎஸ்டிபி வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்.
கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான். சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி. 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம், மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி.
நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் தமிழ்நாட்டுக்கே சொந்தம். தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி. 2031ம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன், இது உறுதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
