×

அஜித்குமார் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை டிஎஸ்பி, இன்ஸ். உட்பட 4 போலீசார் சேர்ப்பு

மதுரை: மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி உள்பட மேலும் 4 காவல் துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கரமணிகண்டன், தனிப் படையினரின் வாகன டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்கின் விசாரணை மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஆர்.ஜோசப் ஜாய் நேற்று விடுப்பு என்பதால், வழக்கு 6வது கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.உதயவேலன் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது மதுரை மத்திய சிறையில் உள்ள 6 பேரும் வீடியோ கான்பரன்சில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து சிபிஐ தரப்பினர் ஆஜராகி, ‘‘மடப்புரம் அஜித்குமார் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறோம்.

அதில், மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம், 7வது குற்றவாளியாகவும், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் 8வதாகவும், எஸ்ஐ சிவக்குமார் 9வதாகவும், தலைமைக் காவலர் இளையராஜா 10வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை ஏற்கவேண்டும்’’ என்றனர்.இதைக் கேட்ட நீதிபதி எம்.உதயவேலன், ‘‘இந்த வழக்கின் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன். அதற்குள் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்திலேயே கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம். சிறையில் உள்ள அனைவரின் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டு விசாரணையை டிச. 19க்கு தள்ளி வைத்தார்.

Tags : Ajith Kumar ,Madurai ,Madapuram ,Manamadurai ,DSP ,Bhadrakalyamman ,Thiruppuvanam ,Sivaganga district ,CBI… ,
× RELATED விமானத்தில் வந்தபோது திடீர்...