*பெல் நிறுவன பொறியாளர்கள் வருகை
நெல்லை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த பெல் பொறியாளர்கள் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிட்டங்கிகளில் பாதுகாப்பாக வைக்கப்பபட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்கு பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் -2,358, வாக்குப்பதிவு இயந்திரங்கள் 4,212 மற்றும் விவிபேட் -3,042 என மொத்தம் 9 ஆயிரத்து 612 இயந்திரங்கள் தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட 3,786 வாக்குப்பதிவு கருவிகள், 1,765 கட்டுப்பாட்டு கருவிகள், 2,112 வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகள் என மொத்தம் 7,663 கருவிகளும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்படாத மற்றும் பழுதான 789 வாக்குப்பதிவு கருவிகள், 438 கட்டுப்பாட்டு கருவிகள், 536 வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகள் என மொத்தம் 1,763 இயந்திரங்கள், தேர்தல் ஆணையத்திடம் இருந்து கூடுதலாக பெறப்பட்ட 220 கட்டுப்பாட்டு கருவிகள் என மொத்தம் 4,575 வாக்குப்பதிவு கருவிகள், 2,423 கட்டுப்பாட்டு கருவிகள், 2,648 வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகள் என மொத்தம் 9,646 இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
தென்காசியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2,848ம், கட்டுப்பாட்டு கருவிகள் 2,466ம், வாக்கு செலுத்தியதை உறுதி செய்யும் கருவிகள் 2551ம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் பொது (தேர்தல்) அறிவுரையின்படியும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பெங்களூரைச் சேர்ந்த பாரத் எலக்ட்ரானிஸ் பொதுத்துறை நிறுவனத்தின் பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்ப்பு பணிகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்.
இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் தயாராக உள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிட்டங்கி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு உரிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கிட்டங்கி திறப்பின்போதும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ளும் போதும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் முகவர்கள் உடனிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் வர இயலாத சமயங்களில் கட்சிப் பிரதிநிதி ஒருவரை உரிய ஆளறிச் சான்றுடன் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து நெல்லை கலெக்டர் சுகுமார் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பான பணிகளில், ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
