ரூ.8 கோடி இரிடியம் மோசடி: பாமக நிர்வாகி கைது

சேலம்: இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்து, முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி, இரிடியம் விற்பனை செய்வதாக கூறி தமிழ்நாடு முழுவதும் ஒரு கும்பல் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபடுவதாக சேலம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் 60 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ஆர்.சி.செட்டிப்பட்டியை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனம் நடத்தி வரும் லாசர் (36) என்பவர் கொடுத்த மோசடி புகாரில், பவானியை சேர்ந்த தினேஷ்குமார் (37), ஓமலூர் பல்பாக்கியை சேர்ந்த செல்லத்துரை (55) ஆகிய 2 பேரை நேற்று சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதில், தினேஷ்குமார் பவானி பாமக நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தது தெரியவந்தது. கைதான 2 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், இருவர் உள்பட 4 பேர் சேர்ந்து, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பலரிடம் ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி, இரிடியம் விற்பனை என கூறி ரூ.8 கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 செல்போன், ஒரு லேப்டாப், மோசடி ஆவணங்கள், ரிசர்வ் வங்கியின் சீல், ரிசர்வ் வங்கி முத்திரையுடன் கூடிய முதலீட்டுக்கான விண்ணப்ப படிவங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: