×

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்; அமித்ஷா திட்டம் முறியடிப்பு; ‘உறவாடிக் கெடுக்கும் பாஜ’ என்ற பேச்சால் பரபரப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை. சட்டப்பேரவை தேர்தலையொட்டி கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடிக்கு முழு அதிகாரம் அளித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அறிவித்துள்ளதோடு, உடன் இருந்தே கெடுக்கும் துரோகிகள் என்று பாஜவையும் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் அதிமுகவும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி எந்தவித முக்கியத்துவமும் அளிக்காமல் கோரிக்கையை நிராகரித்து வருகிறார். ஆனாலும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்துகொண்டே இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி வருகிறார். அண்ணாமலையும் இதற்கு ஆதரவாக இருக்கிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மண்டபத்தின் நுழைவாயில் அருகே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொறித்த வரவேற்பு பதாகைகள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், புலியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து கொண்டிருந்தன. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்ட நிகழ்வுகளை வெளியே இருந்து பார்வையிடும் வகையில் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இருந்தது. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு 3 நுழைவு பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன. செயற்குழு உறுப்பினர்கள் வருவதற்கு தனி பாதையும், பொதுக்குழு உறுப்பினர்கள் வருவதற்கு தனி பாதையும், சிறப்பு அழைப்பாளர்கள் வருவதற்கு தனி பாதையும் அமைக்கப்பட்டு இருந்தன.

செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. கூட்டத்துக்கு வந்தவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். விழா மேடைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை 10.30 மணிக்கு வந்தார். அவரை கட்சியின் முன்னணி தலைவர்கள் வரவேற்றனர். இதையடுத்து அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 30 நிமிடம் நடைபெற்றது.

செயற்குழு கூட்டம் முடிந்ததும், மண்டபத்தின் பிரதான அரங்கத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. கட்சியின் முன்னணி தலைவர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி உள்ளிட்டவர்கள் பேசினர். உடல்நலக்குறைவு காரணமாக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூட்டத்திற்கு வரவில்லை. அவருக்கு பதில், கே.பி.முனுசாமி தற்காலிக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இறுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
* பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக-பாஜவுடன் வெற்றி கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது.
* தமிழகத்தில் வர இருக்கின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு (அதிமுக – பாஜ கூட்டணிக்கு) அதிமுகவே தலைமை தாங்கும். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே இருப்பார்.
* அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது.
* தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) அதிமுக வரவேற்கிறது.
* எம்.ஜிஆர், ஜெயலலிதா தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராக திகழ்ந்து வரும் எடப்பாடி பழனிசாமியை 2026ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம்.
* அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை. (ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு மீண்டும் அவர்களை சேர்க்க பாஜ திட்டமிட்டு வருகிறது. இதற்காக அண்ணாமலை டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதிமுக பொதுக்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது).
* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை நிறுத்தக்கூடாது என்று டிடிவி தினகரன், அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து 2 கட்ட பேச்சுவார்த்தையை கூட்டணி கட்சி நிர்வாகிகள் முடித்திருந்தனர். இதற்காக அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்தநிலையில் அவர்களது கோரிக்கையை நிராகரித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்களது வழிக்கு வராத எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு பதிலாக அதிமுகவில் மாற்றம் கொண்டுவர அமித்ஷா திட்டமிட்டிருந்தார் என கூறப்படுகிறது.

இதற்காக அண்ணாமலை மூலம் காய் நகர்த்தப்பட்டு வந்தது. ஆனால் அதிமுக பொதுக்குழுவில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டதால், அமித்ஷாவின் திட்டம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ‘எதிரிகள் மட்டுமல்ல உடன் இருந்தே கெடுக்கும் துரோகிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று பாஜவை மறைமுகமாக தாக்கினார். இந்த பேச்சை அரங்கத்தில் இருந்த நிர்வாகிகள் கைதட்டி வரவேற்றனர். திடீரென்று அதிமுக முன்னணி தலைவர்கள் பாஜவை தாக்கிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* நுழைவாயிலில் தள்ளுமுள்ளு 50க்கும் மேற்பட்டவர்கள் காயம்
பொதுக்குழு கூட்டம் தொடங்கும் முன்பாக நுழைவு வாயிலில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பொதுக்குழு கூட்டம் தொடங்கும் முன்பாக நுழைவு வாயிலில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி வேனில் உள்ளே சென்ற நிலையில், ஒரே நேரத்தில் அதிமுகவினர் உள்ளே செல்ல முற்பட்டனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருசிலர் தடுமாறி கீழே விழுந்த பிறகு, எழுந்து சென்றனர். பலர் மதில் சுவர், இரும்பு கேட் ஏறி உள்ள சென்றனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த நிகழ்வால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது.

* விஜய் கூட்டத்தில் 41 பேர் மரணம் அதிமுக பொதுக்குழுவில் இரங்கல்
சென்னை, வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கும், கட்சி நிர்வாகிகள் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் செம்மலை வாசித்தார். தீர்மானத்தில் முக்கியமாக, கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கும், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்நாள் உதவியாளர் மகாலிங்கம் மறைவுக்கும், மூத்த நடிகை சரோஜாதேவிக்கும், நாகாலாந்து கவர்னராக இருந்து மறைந்த இல.கணேசனுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

* கடும் போக்குவரத்து நெரிசல்
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து உறுப்பினர்கள் கார்களில் வந்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், திரண்டு நின்று அவருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

* சைவ, அசைவ உணவு வகைகள்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு சைவ, அசைவ உணவு அளிக்கப்பட்டது. அதன்படி, காலை உணவு 3,000 பேருக்கும், மதிய உணவு சைவத்தில் 2,000 பேருக்கும், அசைவத்தில் 8,000 பேருக்கும் உணவு தயார் செய்யப்பட்டிருந்தது.

சைவம்:
1) தம்ஃப்ரூட் அல்பா 2) புடலங்காய் கூட்டு 3) சைனீஸ் பொரியல் 4) மாவடு இஞ்சி, நிலக்கடலை மண்டி 5) பிளாக்காய், உருளை மசாலா 6) பருப்பு வடை 7) அப்பளம் 8) ஊறுகாய் 9) மோர் மிளகாய் 10) வெஜ் பிரியாணி – தயிர் பச்சடி 11) சாதம் 12) கத்தரிக்காய், முருங்கக்காய், பீன்ஸ் சாம்பார் 13) வத்தல் குழம்பு 14) தக்காளி ரசம் 15) தயிர் 16) பருப்பு பாயாசம் 17) வாழைப்பழம்.

அசைவம்:
1) பிரட் அல்வா, 2) மட்டன் பிரியாணி, 3) தாளிச்சா, 4) ஆனியன் தயிர் பச்சடி, 5) கத்திரிக்காய் கட்டா, 6) மட்டன் குழம்பு, 7) சிக்கன் 65, 8) வஞ்சரை மீன் வருவல், 9) முட்டை மசாலா, 10) வெள்ளை சாதம் 11) தக்காளி ரசம் 12) தயிர் 13) இஞ்சி புளி மண்டி 14) பருப்பு பாயாசம். இதுதவிர 1) கேசரி 2) வடை 3) பொங்கல் 4) இட்லி 5) சாம்பார் 6) கார சட்னி 7) தேங்காய் சட்னி 8) வாட்டர் பாட்டில் 9) காபி/டீ ஆகியவையும் தயார் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது.

Tags : AIADMK ,Amit Shah ,BJP ,Chennai ,O. Panneerselvam ,T.T.V. Dinakaran ,AIADMK general committee ,Edappadi ,Palaniswami ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு 12 – 14ம்...