பாலக்கோடு அருகே அடிப்படை வசதிக்கு ஏங்கும் குளிக்காடு கிராம மக்கள்

*மின் சப்ளையின்றி இருளில் தவிப்பு

*குடிநீரில் மாசு கலப்பால் அவதி

பாலக்கோடு : பாலக்கோடு அருகே குளிக்காடு கிராமத்தில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குளிக்காடு கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் தங்குவதற்கு வீடின்றி தென்னை ஓலை மற்றும் தார்பாய் மூலம் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மின்சாரம் வழங்காததால், இருளில் வாழ்ந்து வருகின்றனர். இதனால், இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் மூலம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட முறையாக சாலை வசதி கிடையாது. சுமார் 20க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாத காரணத்தால், இதுவரை பள்ளியில் சேர்க்கப்படாமல் உள்ளனர். வெளி மாநிலத்தில் இருந்து கூலி தொழிலாளிகளாக வருபவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தருவதாக அரசு தெரிவித் துள்ளளது. எனவே, இங்குள்ள சிறுவர்களும் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும், இப்பகுதி மக்களுக்கு இது நாள் வரை ஒகேனக்கல் கூட்டு நீர் வழங்கப்படவில்லை. இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் குழாயானது, சாக்கடை கால்வாய்க்குள் அமைக்கப்பட்டுள்ளது. குழாய் பழுதடைந்து தண்ணீருடன் மாசு கலந்து வருவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குடிநீரில் மாசு கலந்து வருவதால் ஒவ்வாமை மற்றும் தோல் நோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஓட்டு கேட்பதற்காக மட்டுமே இப்பகுதிக்கு அரசியல் கட்சியினர் வருகின்றனர். அதன் பின்பு எட்டிக்கூட பார்ப்பதில்ைல. சாலை மற்றும் குடிநீர், வீடு, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் இதுவரை யாரும் செய்து தரவில்லை. மத்திய- மாநில அரசுகளின் எந்த திட்டமும் எங்களுக்கு கிடைக்கவில்லை,’ என்றனர்.

Related Stories: