*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியினை வேளாண் துறையினர் வரும் 12ந் தேதிக்குள் முடித்திட வேண்டும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் குறிப்பாக நெல் உற்பத்தி 90 சதவிகிதம் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா என ஆண்டொன்றுக்கு மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வரும் நிலையில் நடப்பாண்டில் வழக்கத்தைவிட கூடுதலான பரப்பளவில் சாகுபடியினை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி மாவட்டத்தில் நடப்பு காரீப் குறுவை பருவத்தில் வழக்கமான சாகுபடி ஒன்றரை லட்சம் என்ற நிலையில் நடப்பாண்டில் ஒரு லட்சத்து 93 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்று அறுவடை பணிகள் முடிவுற்றுள்ளன. சம்பா மற்றும் தாளடி சாகுபடி 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் வழக்கமாக நடைபெறும்.
நடப்பாண்டில் இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தவாறு இருந்து வந்தது.
டிட்வா புயல் சின்னம் காரணமாக மாவட்டத்தில் கடந்த மாதம் 28, 29 மற்றும் 30 தேதிகளில் பெய்த கனமழையில் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழைநீரால் சூழப்பட்டன. மழைநீரால் சூழப்பட்டுள்ள நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுப்பினை மாவட்டம் முழுவதும் வேளாண் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கடந்த 1ந் தேதி முதல் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் ஊராட்சி மற்றும் நன்னிலம் வட்டம், கொல்லுமாங்குடி பகுதியில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருவதனை கலெக்டர் மோகனசந்திரன் நேற்று நேரில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் மோகனசந்திரன் கூறியதாவது: மாவட்டத்தில் நவம்பர் மாதத்தின் இயல்பான மழை அளவு என்பது சராசரியாக 350.54 மி.மீ ஆகும். ஆனால் நடப்பாண்டில் 417.41 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. மேலும் நடப்பு (டிசம்பர்) மாதத்தில் மட்டும் முதல் மற்றும் 2 தேதிகளில் 73 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. கனமழையினால் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஒரு லட்சத்து 46 ஆயிரம் ஹெக்டேர் நெல் பரப்பில் 18 ஆயிரத்து 376 ஹெக்டேர் பரப்பு நீரில் மூழ்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பயிர் சேத கணக்கெடுப்பு செயலி மூலம் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இணைந்து கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பணியினை வரும் 12ந் தேதிக்குள் முடித்திட வேண்டும்.
பாதிக்கப்பட்ட எந்த ஒரு விவசாயியும் விடுதலின்றி கணக்கெடுத்திட வேண்டும் என்பதுடன் பாதிப்பு அதிகமுள்ள வட்டாரங்களுக்கு பாதிப்பு குறைவான வட்டாரங்களிலிருந்து உதவி வேளாண்மை அலுவலர்களை மாற்றுப்பணியாக கணக்கெடுப்பு பணியில் ஈடுப்பட்டு விரைந்து பணியினை முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயசீலன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, உதவி இயக்குநர்கள் (பொ) பிரபாவதி, சந்திரசேகரன், வேளாண்மை அலுவலர்கள் தரணிதரன், கருப்பையா, அட்சயா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
