×

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: 107 எம்.பி.க்கள் கையெழுத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்

 

புதுடெல்லி: தர்காவிற்கு அருகில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய கோரி தீர்மானத்தை முன்மொழியுமாறு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகரிடம் நோட்டீஸ் சமர்ப்பித்தனர்.மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ஆங்கிலேயர் கால சர்வே கல்லை தீபத் தூண் என்று கூறி அதில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபத் தூணில் தீபமேற்ற கடந்த 1ம் தேதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே மட்டும் தீபம் ஏற்றப்பட்டதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, ‘உயர் நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பில் மனுதாரரைத் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்’ என மீண்டும் உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதியின் இந்த உத்தரவு திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் எனக் காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். மேலும், அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நீதிபதி சுவாமிநாதன் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியதாகத் தமிழக அரசு குற்றம்சாட்டி இருந்தது. இது தொடர்பான வழக்குகள் தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி ‘இம்பீச்மென்ட்’ (தகுதி நீக்க) தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர திமுக முடிவு செய்தது. இதற்கான நோட்டீசில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறும் பணியில் திமுக எம்.பி.க்கள் ஈடுபட்டனர்.

நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவர மக்களவையில் 100 எம்பிக்கள் அல்லது மாநிலங்களவையில் 50 எம்பிக்கள் கையெழுத்திட வேண்டும் என்பது விதிமுறை. இந்த தீர்மானத்துக்கான நோட்டீசில் மொத்தம் 107 எம்.பி.க்களின் கையெழுத்து பெறப்பட்டது. இந்நிலையில் திமுக நாடாளுமன்ற கட்சி தலைவர் கனிமொழி, கட்சியின் மக்களவை தலைவர் டிஆர் பாலு, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை முன்மொழிவதற்கான நோட்டீசை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று சமர்ப்பித்தனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 217வது பிரிவின்படி கொடுக்கப்பட்டுள்ள இந்த நோட்டீசில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அரசியல் ரீதியாக ஒருசார்புத் தன்மையுடன் மதசார்பற்ற தன்மைக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், நீதித்துறையின் பாரபட்சமின்மை, வெளிப்படைத்தன்மை, மதசார்பற்ற தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நடந்துகொள்கிறார் என்றும் குறிப்பிட்ட ஒரு வக்கீலுக்கும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த வக்கீல்களுக்கும் சாதகமாக நடக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Judge ,G.R. Swaminathan ,DMK ,New Delhi ,Madras High Court ,Thiruparankundram hill ,Madurai… ,
× RELATED ஏஐ கட்டமைப்பு வசதிக்காக இந்தியாவில்...