×

ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் கார்ல்சனை வீழ்த்தி எரிகைசி அசத்தல்

 

கான்ஸ்பாய்: ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் பைனல்ஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை, இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி வெற்றி வாகை சூடினார். தென் ஆப்ரிக்காவின் கான்ஸ்பாய் நகரில், ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் பைனல்ஸ் ரவுண்ட் ராபின் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. ஒரு போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் மோதினர்.

இதில் சிறப்பாக செயல்பட்ட எரிகைசி, வெற்றி வாகை சூடினார். 7 சுற்றுகள் முடிவில், எரிகைசி 4.5 புள்ளிகள் பெற்று, 3ம் இடத்தை பிடித்துள்ளார். இப்போட்டியின் புள்ளிப் பட்டியலில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த, ஃபிடே உலகக் கோப்பை வெற்றியாளர் ஜவோகிர் சிண்டாரோ 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் லெவோன் ஆரோனியன் 5 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.

அடுத்ததாக நடக்கவுள்ள நாக்அவுட் போட்டியில் அர்ஜுன் எரிகைசி, ஜெர்மனி கிராண்ட் மாஸ்டர் வின்சென்ட் கீமருடன் மோதவுள்ளார். கார்ல்சன், அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவுடன் களம் காண உள்ளார். ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் பைனல்ஸில், தென் ஆப்ரிக்காவில் நடக்கும் போட்டிகள், 5வது தொடராக அமைந்துள்ளன. இதற்கு முந்தைய போட்டித் தொடர்கள், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளில் நடந்தன.

ஒட்டு மொத்த போட்டிகளின் முடிவில் வெற்றி பெறும் வீரர், 2025 ஃப்ரீஸ்டைல் செஸ் சாம்பியனாக உருவெடுப்பார். இதுவரை நடந்துள்ள தொடர்களின் புள்ளிப்பட்டியலில், கார்ல்சன் முன்னிலை வகிக்கிறார். தற்போதைய தொடரில், அவர் 4ம் இடம் பிடித்தால் கூட, ஒட்டு மொத்த தொடர்களில் வெற்றியாளராக உருவெடுப்பார்.

 

Tags : Freestyle Chess Grand Slam ,Erikaishi ,Carlsen ,Kanspoi ,Grandmaster ,Arjun Erikaishi ,Magnus Carlsen ,Freestyle Chess Grand Slam Finals ,Kanspoi, South Africa ,Freestyle Chess Grand Slam… ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20...