×

டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி பேச்சு; அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்

சென்னை: அதிமுக, பாஜக கூட்டணிக்குள் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை இணைப்பது குறித்து அமித்ஷாவை சந்திக்க, அண்ணாமலை நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று அமித்ஷாவை சந்தித்துப் பேசுகிறார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உடைந்தது. அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி உருவானது. பாஜக தலைமையில் டிடிவி தினரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 18 சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தநிலையில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் உருவானது. இந்தக் கூட்டணி அமைய வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நிபந்தனை விதித்தார். அதை ஏற்றுக் கொண்ட பாஜக மேலிடம், அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நயினார் நாகேந்திரனை நியமித்தது.

இந்தநிலையில் நயினாருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கும் அதிமுகவில் இருந்த காலத்திலேயே மோதல் இருந்தது. இதனால், தற்போது மாநில தலைவராக நயினார் வந்ததும் அவர்கள் கூட்டணிக்கு வரவிடாமல் ஓரங்கட்டப்பட்டனர். இந்தநிலையில், நடிகர் விஜயின் தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால், அதிமுக நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் தவெகவுக்கு செல்லக்கூடாது என்று அமித்ஷா கருதினார்.மேலும் அண்ணாமலையுடன் நெருக்கமாக உள்ள டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணிக்குள் அழைத்துவரும் பொறுப்பு, அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. இதனால் இரு நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணாமலை சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து, டிடிவி தினகரனை நேற்று மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரையும் என்டிஏ கூட்டணியில் இணைப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, நேற்று இரவு அண்ணாமலை கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில், அமித்ஷாவை இன்று சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து அண்ணாமலை கருத்து தெரிவிக்கிறார். அதோடு இருவருமே அதிமுகவில் இணைய வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, அவர்கள் தனிக்கட்சியாக செயல்பட்டு என்டிஏ கூட்டணியில் சேரட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறிவிட்டார். இதனால், இந்த பேச்சுவார்த்தையின் விபரங்களை அண்ணாமலையிடம், அமித்ஷா கேட்கிறார். அதன்பின்னர் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுக்குழு நாளை கூட உள்ள நிலையில், அண்ணாமலை டெல்லி சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : DTV ,DINAKARAN ,O. Alliance ,Paneer Selvam ,Annamalai ,Delhi ,Amitsha ,Chennai ,O. Annamalai ,Lok Sabha elections ,Adimuka ,BJP ,
× RELATED 3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ்...