×

எதிர்கட்சிகளின் அழுத்தத்திற்கு ஒன்றிய அரசு பணிந்ததால் நாடாளுமன்றத்தில் நாளை ‘எஸ்ஐஆர்’ விவாதம்: தீவிர கணக்கெடுப்பு கெடு 11ம் தேதி முடியும் நிலையில் பரபரப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக எழுந்துள்ள விவகாரத்தில், ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் போர்க்கொடி தூக்கியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதாகக் கூறி பீகாரில் நடத்தப்பட்ட முன்னோடித் திட்டத்தின் முடிவில் சுமார் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டன. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதே பாணியில் மற்ற மாநிலங்களிலும் பெயர்கள் நீக்கப்படுவது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்டச் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதற்கான படிவங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடு வரும் 11ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ‘ஆளும் கட்சிக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் 59 லட்சம் முதல் 85 லட்சம் வரையிலான வாக்காளர்களின் விவரங்கள் சேகரிக்கப்படவில்லை என்று கூறி, அவை நிராகரிக்கப்படும் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இது மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் சுமார் 13 சதவீதம் வரை இருப்பதால், ‘எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியைச் சிதைக்கும் நோக்கில் ஏராளமான உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது’ என்று அரசியல் கட்சியினர் வேதனை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 46 லட்சம் பெயர்கள் நீக்கப்பட உள்ள விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மிகக் கடுமையான புகார்களை முன்வைத்துள்ளன. ‘வெளிநாட்டினர் என்ற போர்வையில் சிறுபான்மையினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான சதி இது’ என்றும், ‘தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) திட்டத்தை மறைமுகமாக அமல்படுத்தும் முன்னோட்டமே இந்த நடவடிக்கை’ என்றும் அக்கட்சிகள் ஒன்றிய அரசைச் சாடியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், ராஜஸ்தானில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளிலும் கடுமையான கெடுபிடிகள் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ‘முறையான ஆவணங்கள் இல்லாத ஏழை எளிய மக்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைக் குறிவைத்தே இந்த நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்று சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் ஒருசேரக் குரல் எழுப்பியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்தத் தீவிரத் திருத்தப் பணியானது சாதாரண நடைமுறைகளுக்கு மாறாக மிகக் கடுமையாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது வீட்டில் இல்லாவிட்டால், உடனடியாக அவர்கள் முகவரியில் இல்லாதவர்களாகக் கருதப்பட்டுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இத்தகைய பரபரப்பான சூழலில், வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16ம் தேதி வெளியாக உள்ளது. அதில் பெயர் விடுபட்டவர்கள் ஜனவரி மாதம் வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றாலும், ‘தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது லட்சக்கணக்கானோர் வாக்குரிமையை இழக்க நேரிடும்’ என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. இறுதிப் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியாகவுள்ளது.

அதேநேரம் எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக சுமார் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தியுள்ளார். எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நாளை (டிச. 9) நண்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் எஸ்ஐஆர் பணியின் போது, தேர்தல் ஆணையம் கொடுத்த நெருக்கடியால் 40க்கும் தேர்தல் பணியாளர்கள், அலுவலர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்தும் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருவதால், இவ்விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசவாய்ப்புள்ளது.

Tags : SIR ,EU government ,New Delhi ,Electoral Commission ,
× RELATED இண்டிகோ விவகாரத்தில் நீதிமன்றம்...