பனாஜி: கோவாவில் உள்ள இரவு விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவாவின் வடக்கு பகுதியில் அர்போரா கிராமத்தில் ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற பெயரில் பிரபல இரவு நேர கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இந்த விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
விடுதி முழுவதும் பரவிய தீயைக் கண்டு உள்ளே இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் விடுதி ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் விடுதியின் சமையலறை ஊழியர்கள். இதில் மூன்று பெண்களும் அடங்குவர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சம்பவ இடத்துக்கு விரைந்தார். ‘‘5 சுற்றுலா பயணிகள், 20 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். தீக்காயம் அடைந்ததால் 3 பேரும், மற்றவர்கள் மூச்சு திணறியும் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதிக்குள்ளேயே பட்டாசு வெடித்ததுதான் தீ விபத்துக்கு காரணம். விடுதி நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என்றார். மேலும் தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீ விபத்து தொடர்பாக விடுதியின் இரண்டு உரிமையாளர்கள், தலைமை பொது மேலாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரவு விடுதியின் தலைமை பொது மேலாளர் மற்றும் 3 ஊழியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இறந்தவர்களில் ஜார்க்கண்ட் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருந்ததால் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டனர். விடுதியின் உரிமையாளர் இறந்தவர்களின் உடல்களை சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

* பெண் குத்தாட்டம் வீடியோ வைரல்
விபத்து நடப்பதற்குச் சில நொடிகள் முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘கரும்ப்புகை கிளம்பியவுடன் விடுதியில் இருந்தவர்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடும் காட்சிகள்’ பதிவாகியுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், உரிய அனுமதியின்றி விதிமுறைகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் இந்த விடுதி கட்டப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதேநேரம் விடுதியில் விபத்து நடப்பதற்கு பெண் ஒருவர் குத்தாட்டம் போடுவதும், அவரது பின்னணியில் இசை கலைஞர்கள் வாத்திய கருவிகளை இசைத்து பிரபல இந்தி சினிமா பாடலை பாடும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* பாரபட்சமற்ற விசாரணை தேவை – காங்கிரஸ்
கோவா இரவு விடுதியில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தவிர்க்கக்கூடிய இந்த துயர சம்பவம் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இதுபோன்ற சம்பவங்களுக்கு விரிவான விசாரணை, கடுமையான பொறுப்புக்கூறல் மற்றும் அனைத்து தீ பாதுகாப்பு விதிமுறைகளும் அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கை தேவை. அப்போது தான்இதுபோன்ற பேரழிவு சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாது என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இது ஒரு விபத்து மட்டுமல்ல. இது பாதுகாப்பு மற்றும் அரசு நிர்வாகத்தின் குற்றவியல் தோல்வியாகும். ஒரு முழுமையான, வெளிப்படையான விசாரணை தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தீ பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவதில் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
* பிரதமர் மோடி இரங்கல்
25 பேர் உயிரிழந்த தகவல் அறிந்த பிரதமர் மோடி முதல்வர் பிரமோத் சாவந்துடன் தொலைபேசியில் பேசினார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். நிலைமை குறித்து முதல்வர் சாவந்துடன் பேசினேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
