×

ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி: 2வது அரையிறுதியில் இன்று இந்தியா-ஜெர்மனி பலப்பரீட்சை

சென்னை: 14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. லீக் மற்றும் கால்இறுதி முடிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, அர்ஜென்டினா, கடந்த முறை 3-வது இடம் பெற்ற ஸ்பெயின் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் சென்னையில் இன்று (ஞாயிறு) இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் 2 முறை சாம்பியனான (2001, 2016) இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

ரோகித் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் சிலி, ஓமன், சுவிட்சர்லாந்தை பந்தாடியது. 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்த கால்இறுதியில் இந்தியா பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. 7 முறை சாம்பியனான ஜெர்மனி லீக் போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகளை துவம்சம் செய்தது. 2-2 என்ற கோல் கணக்கில் சமனான கால்இறுதியில் பெனால்டி ஷூட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி அணி 10-வது முறையாகவும், இந்திய அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தங்களது முழு பலத்துடன் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு, பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரத்தில் வலுவான ஜெர்மனியின் சவாலை சமாளிக்க இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

பலம் வாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி பைனலுக்கு இந்தியா தகுதி பெற தில்ராஜ் சிங் (5 கோல்), மன்மீத் சிங் (5), அர்ஷ்தீப் சிங் (4), ஷர்தானந்த் திவாரி (4), அஜீத் யாதவ் (3), அன்மோல் எக்கா (2), ரோசன் குஜுர் (2), லுவாங் (2), குர்ஜோத் சிங் (2), கேப்டன் ரோகித் (1) ஆகிய வீரர்கள் மீண்டும் கைகொடுத்தால் சுலபமாக வெற்றி பெறலாம். இதுபோல் காலிறுதியில், `பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் அசத்திய கோல்கீப்பர் பிரின்ஸ் தீப் சிங் அணிக்கு பலம் சேர்க்கலாம்.

Tags : JUNIOR MEN'S WORLD CUP HOCKEY ,INDIA ,Chennai ,14th Junior Men's World Cup Hockey Tournament ,Madura, Chennai ,Germany ,India, ,Argentina ,
× RELATED ஹவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்...