×

குற்ற வழக்குகளில் கைதாகி நீதி கிடைக்காமல் தவிக்கும் 50,000 சிறுவர்கள்: நாடு முழுவதும் வெளியான அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: சிறார் நீதி அமைப்பில் நிலவும் உள்கட்டமைப்பு குறைபாடுகளால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார் நீதிச் சட்டம் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2015ன் படி, சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் சிறார்களைப் பாதுகாத்து அவர்களை நல்வழிப்படுத்துவதே முக்கிய நோக்கமாகும். ஆனால், இந்த நோக்கத்திற்கு மாறாக இந்தியாவின் சிறார் நீதி அமைப்பானது கடுமையான நிர்வாகத் தாமதங்கள், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மிகவும் பலவீனமாகச் செயல்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ‘சிறார் நீதி மற்றும் சட்டத்துடன் முரண்படும் குழந்தைகள்’ என்ற தலைப்பிலான இந்திய நீதி அறிக்கையில், நாட்டின் தற்போதைய நீதி பரிபாலன அமைப்பிற்குள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களுக்கான மறுவாழ்வு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் புள்ளிவிவரப்படி, கடந்த 2023 அக்டோபர் வரை சிறார் நீதித்துறையின் கீழ் இருந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் 55 சதவீதம் நிலுவையில் உள்ளன.

‘வழக்குகளை விரைவாக முடிப்பதே சிறார்களின் நலனுக்கு உகந்தது’ என சட்டம் கூறினாலும், நீதிபதிகள் மற்றும் சமூகப் பணியாளர்கள் அடங்கிய முழுமையான அமர்வு இல்லாததே இந்தத் தேக்கத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக நான்கு நீதிக் குழுக்களில் ஒன்று முழுமையற்றதாகவே செயல்படுகிறது. மேலும் 30 சதவீத குழுக்களில் இலவச சட்ட உதவி மையங்கள் இல்லை என்றும், 14 மாநிலங்களில் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான போதிய பாதுகாப்பு இடங்கள் இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரியவர்களுக்கான நீதிமன்றங்களைப் போலவே சிறார் நீதி அமைப்பும் செயல்படுவதாகவும், ‘பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான சீர்திருத்தச் சூழலை உருவாக்க போதிய நிதியும், கண்காணிப்பும் அவசியம்’ என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : New Delhi ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...